முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை தேர்தல் விவகாரம்: ப.சிதம்பரம் மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

மதுரை,ஜூன்.8 - சிவகங்கை பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்துள்ள வழக்கை விசாரிக்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளி தள்ளுபடி செய்துவிட்டது.  கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் உள்ள சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் ராஜ கண்ணப்பன் முன்னிலையில் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ப.சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. அதனால் ப.சிதம்பரத்தின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் ராஜ கண்ணப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சார்பாக அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ராஜ கண்ணப்பன் சார்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை. அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டனர். அன்னை கஸ்தூரிபா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிக்கு கடந்த 3.5.2009-ம் தேதி அன்று ரூ.20 லட்சம் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் மூலம் கொடுக்கப்பட்டது. இந்த பணம் 500 பெண்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டபோது கையும் களவுமாக பிடிபட்டனர். அதை போலீசார் எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை. வாக்காளர்கள் மிரட்டப்பட்டனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகத்தான் இருந்தார். அந்த செல்வாக்கை பயன்படுத்தியதால் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. தேர்தல் அதிகாரிகளும் அதிக நேரம் பணிபுரிந்துள்ளனர். ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் இந்த தேர்தலில் தீவிர ஏஜெண்டாக செயல்பட்டார். மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்தவர்கள். அவர்கள் சிதம்பரத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலேயே செயல்பட்டனர். இதை தேர்தல் நடக்கும் முன்பே நான் ஆட்சேபித்தேன். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நிதி அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் பல்வேறு வங்கிகிளைகளை சிவகங்கையில் தொடங்கிவைத்தார். இதனால் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், சிதம்பரத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர். இவற்றையெல்லாம் நான் ஆட்சேபித்தபோது தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. எனவே சிதம்பரம் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இதை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

ராஜ கண்ணப்பன் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்றும் அதை விசாரிக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் நீதிபதி வெங்கட்ராமன் அளித்த தீர்ப்பு விவகாரம் வருமாறு:-

ராஜ கண்ணப்பன் மனுவில் 4 மற்றும் 5-வது பாராவில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீக்கப்படுகிறது. (ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்ததால் வங்கி அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து விசுவாசமாக இருந்ததாக குற்றச்சாட்டு, மகன் கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு) மற்ற புகார்களை பொருத்தவரை இந்த முறைகேடுகள்,சட்ட மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் இப்போதுள்ள சூழ்நிலையில் நீக்க வேண்டிய அவசியமில்லை. அது சம்பந்தமான மனுதாரரின் (ப.சிதம்பரம்) கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மற்ற குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும். இவ்வாறு நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்