முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, ஜூன்.- 9 - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு கார் மூலம் கடலூரில் இருந்து புதுவைக்கு வந்தார். கவர்னர் இக்பால்சிங் மற்றும் அரசு அதிகாரிகள் அவவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு அவர் கவர்னர் மாளிகையில் தங்கினார்.  நேற்று காலை அவர் புதுவை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரிக்கு சென்றார். அங்குள்ள மரபணு சோதனை மையத்தை அவர் பார்வையிட்டார். அதில் வைக்கப்பட்டு இருந்த மாணவர்களின் படைப்புகளை கண்டு வியந்து மகிழ்ந்தார்.  இதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்துல்கலாம் பேசினார். அவர் பேசியதாவது:- சிறந்த மருத்துவம் என்பது மருத்துவ செலவை குறைப்பதாக இருக்க வேண்டும். எளிய முறையில் அனைவருக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். மருத்துவ மாணவர்கள் முதலில் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.  பின்னர் அதனை பிறருக்கு கற்பிக்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். நோயாளி முழுமையாக குணமடையும் வரை சிகிச்சை அளிக்க வேண்டும். ஒருவேளை அதில் நோயாளிக்கு திருப்தி அளிக்காவிட்டால் மருத்துவ கட்டணம் வசூலிக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அப்துல்கலாமிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:- கேள்வி: ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும், அப்துல் கலாமுக்கும் என்ன வேறுபாடு? பதில்: 50 ஆண்டுகள் தான் அப்துல்கலாமாக இருந்தேன். 5 ஆண்டுகள் ஜனாதிபதி அப்துல்கலாமாக பணிபுரிந்தேன். இந்த 5 ஆண்டுகளில் தான் 71/2 மில்லியன் இளைஞர்களை என்னால் சந்திக்க முடிந்தது. எனது பயணத்திற்காக கிடைத்த அதிநவீன போக்குவரத்து வசதிகளை இளைஞர்களை சந்திப்பதற்காக பயன்படுத்திக் கொண்டேன். அதன்மூலம் அப்தலுகலாமாக 50 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை 5 ஆண்டுகளில் சாதிக்க முடிந்தது. கேள்வி: நீங்கள் படிக்கும் காலத்திற்கும், இப்போதைய காலத்திற்கும் கல்வி முறையில் என்ன வேறுபாடு உள்ளது?
பதில்: கல்வி முறை என்பது எப்படி இருந்தாலும் ஆசிரியர்கள் தான் மாணவர்களின் எண்ணங்களை மாற்றுகின்றனர். ஆசிரியர்களால் தான் மாணவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்.
கேள்வி: அணுமின் உலை பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பதில்: ஜப்பான் புகுஷிமாவில் உள்ள அணுமின் உலை கடல் மட்டத்தை விட 2 மீட்டர் தான் உயரமாக உள்ளது. 91/2 மீட்டர் உயரத்துக்கு கடலில் சுனாமி அலை எழுந்த போது அந்த அணுமின் உலையை தாக்கியது. ஆனால் கூடங்குளம் அணுமின் உலை கடல் மட்டத்தை விட 151/2  மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே அது பாதுகாப்பான நிலையில் இருக்கிறது.
கேள்வி: ஜனாதிபதியை மக்களே ஏன் நேரடியாக தேர்ந்தெடுக்க கூடாது?
பதில்: இந்தியாவில் 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியமைப்பு சட்டத்தின் கீழ் தான் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அதனை மாற்ற வேண்டும் எனில் அரசியல் சட்ட நிபுணர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பின்னர் அப்துல்கலாம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய சூழலில் இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். அவர்களால் தான் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். தேசநலனை மட்டுமே கருத்தில் கொண்டு இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரிக்கு வந்த அப்துல்கலாமை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் குணசேகரன், டீன் முத்துரங்கன், சேர்மன் ராஜகோபால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்