முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் சொத்து குவித்தவழக்கு: பி.சி.சி.ஐ. தலைவருக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஜூன். - 9 - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பி.சி.சி.ஐ. தலைவரும், இந்தியா சிமிண்ட் கம்பெனியின் நிர்வாக இயக்குனருமான ஸ்ரீநிவாசனுக்கு மத்திய புலனாய்வு துறை விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அடுத்த வாரம் ஸ்ரீநிவாசன் ஆஜராக வேண்டும் என்று கோரி சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆந்திர முதல்வராக இருந்தவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த பிறகு இவரது மகனான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு மிஞ்சியதோ ஏமாற்றம்தான். காங்கிரஸ் கட்சி இவருக்கு பலவிதத்தில் பட்டை நாமம் சாத்தியது. இதையடுத்து வெறுத்துப் போன ஜெகன்மோகன் ரெட்டி தன் தந்தை பெயரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்று தனிக் கட்சி தொடங்கி கடப்பா தொகுதியில் போட்டியிட்டு எம்.பியுமானார். ஆந்திராவில் அவருக்கு தொடர்ந்து செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜெகன்மோகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு சி.பி.ஐ. அவரிடம் விசாரணை நடத்தியது. 3 நாள் விசாரணைக்குப் பிறகு ஜெகன்மோகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில்தான் ஜெகன்மோகன் நடத்தி வரும் சில கம்பெனிகளில் ஸ்ரீநிவாசனின் கம்பெனியான இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் செய்த முதலீடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இது தொடர்பாகத்தான் ஸ்ரீநிவாசனை விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.  இதையடுத்து பி.சி.சி.ஐ. தலைவரும், இந்தியா சிமிண்ட்ஸ் நிர்வாக இயக்குனருமான ஸ்ரீநிவாசனுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. மேலும் சில கம்பெனிகளுக்கும் சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்