முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 11 - புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை 12 ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்திய கம்யூ. கட்சி எம்.எல்.ஏவாக இருந்த முத்துக்குமரன் விபத்தில் மரணமடைந்ததையொட்டி, புதுக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அத்தொகுதியில் இடைத்தேர்தல் நாளை 12-ம் தேதி நடைபெற இருக்கிறது.  இங்கு  அ.தி.மு.க சார்பில் கார்த்திக் தொண்டமான், தே.மு.தி.க. சார்பில் ஜாகீர் உசேன், ஐ.ஜே.கே. சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் என 20 பேர் போட்டியிடுகின்றனர். முக்கிய கட்சிகளான தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் இத்தொகுதியில் போட்டியிடவில்லை.  இதனால் அ.தி.மு.க, தே.மு.தி.க இடையே இங்கு நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சி சார்பிலும் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் இத்தொகுதியில் மின்னல் வேக பிரச்சாரம் செய்து அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டமானுக்கு வாக்கு சேகரித்தார். ஒரே நாளில் 9 இடங்களில் அவர் பேசினார். கிட்டத்தட்ட 45 கி.மீ. தூரம் வேனில் பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து அவர் வாக்கு கேட்டார். இத்தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் தி.மு.க. தலைவர் கருணாநிதி நடையை கட்டி விட்டதாகவும் அவர் கிண்டலடித்து பேசினார். தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு பிரச்சினை தீரும். தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறும் என்றும் உறுதியளித்த முதல்வர் ஜெயலலிதா, இங்கு போட்டியிடும் மற்ற அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்யுமாறும் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.  இதே போல் தே.மு.தி.க சார்பில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், கடைசி கட்ட பிரச்சாரம் செய்தார். மற்ற கட்சிகள் போட்டியிடாததால் வேறு யாரும் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக அனைத்து அமைச்சர்களும் மற்றும் பல்வேறு நடிகர்களும்(டி. ராஜேந்தர் உட்பட) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இப்படியாக கடந்த 2 வார காலம் நடந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று உச்சக்கட்டத்தை அடைந்தது. தலைவர்கள் நேற்று வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்டனர். இதனால் தொகுதி முழுக்க ஒரே பரபரப்பு காணப்பட்டது. இந்த பரபரப்பு மிகுந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.  இடைத் தேர்தல் நாளை 12 ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை வாக்குப் பதிவு நடக்கிறது. 

இந்த தேர்தல் பிரச்சாரம் முடிந்ததையடுத்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வி. கலையரசி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புதுக்கோட்டை தொகுதியில் 12 ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. கலந்து கொள்ளவும் கூடாது. பொதுமக்களுக்கு திரைப்படம், தொலைக்காட்சி மூலமாகவோ, அல்லது இது போன்ற எந்தவொரு சாதனங்கள் மூலமாகவோ தேர்தல் தொடர்பான விபரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். விதிமுறை மீறல்கள் செய்தால் அபராதம் அல்லது 2 வருட சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதியில் வாக்காளர்களாக இல்லாதவர்கள் தேர்தல் தொடர்பாக வரவழைக்கப்பட்ட வெளியூரை சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்குள் வெளியேறி விட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் வெளியூரை சேர்ந்தவர்கள் எவரும் தங்கியிருக்க அனுமதி கிடையாது என்றும் கூறியுள்ள கலையரசி புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 10 ம் தேதி மாலை 5 மணியில் இருந்து 12 ம் தேதி வரை தேர்தல் முடிவுகள், தேர்தல் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவது, தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தலையொட்டி 12 ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்று அனைவரும் வாக்களிக்கும் வகையில் புதுக்கோட்டைக்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்