முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மீதான ஊழல்புகார்: சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன் - 11 - பிரதமர் மீது அன்னா ஹசாரே குழு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் குற்றம் சாட்டி இருந்தது. இதுகுறித்து பிரதமர் மீது சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு தேவையில்லை என்று பிரதமர் அலுவலகம் அன்னா ஹசாரே குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 14 பேர் மீது சமீபத்தில் அன்னா ஹசாரே குழு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தனர். பிரதமர்  நிலக்கரி துறை அமைச்சராக இருந்தபோது நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் மீதான குற்றங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். ஜூன் 25 ம் தேதிக்குள் இந்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும் தவறினால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதமும் அனுப்பி இருந்தனர்.  இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை பிரதமர் ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.  இந்நிலையில் பிரதமர் அலுவலகம் ராஜாங்க மந்திரி வி.நாராயணசாமி, அன்னாஹசாரே குழுவினருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் நலனை கருத்தில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படியும், ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படியும்தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பான அனைத்து விபரங்களும் நிலக்கரி துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணை அறிக்கையில் இருந்து கசிந்த சில தகவல்களின் அடிப்படையிலும், பத்திரிகைகளில் வெளியான தகவல்களின் அடிப்படையிலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டி இருப்பது சரியானது அல்ல. ஊழல் புகாருக்கான ஆதாரங்கள் எதையும் நீங்கள் தாக்கல் செய்யவில்லை. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது அதுபற்றிய தனது கருத்துக்களை மத்திய அரசு பொதுக்கணக்கு குழுவிடம் தெரிவிக்கும். மேலும் இதுகுறித்து சி.பி.ஐ. தானே விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களும், மந்திரிகள் மீது நீங்கள் கூறும் புகார்களும் ஏற்கக்கூடியது அல்ல. நாட்டில் அரசாங்கம் உள்ளது. நீதித்துறை உள்ளது. சட்ட நடைமுறைகள் உள்ளன. புகார்கள் வரும்போது அதுபற்றி அரசாங்கத்தின் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துகின்றன. எனவே பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார்கள் பற்றி விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. தனியாக ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்பது நம் விசாரணை அமைப்புகளை அவமதிப்பது போலாகும். அமலாக்கப்பிரிவு, மத்திய நேரடி வரிகள்  வாரியம், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாக கூறுவது தவறானது ஆகும். இதேபோல் சி.பி.ஐ. மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய உங்களுடைய அபிப்பிராயமும்  தவறானது. அரசு பணிகளில் ஒளிவுமறைவற்ற தன்மை வேண்டும் என்பதிலும், ஊழலை ஒழிப்பதிலும் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. வலிமையான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. 

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்