முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தலைமை தேர்தல் ஆணையராக பி.எஸ் சம்பத் இன்றுபதவி ஏற்கிறார்

திங்கட்கிழமை, 11 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 11 - இந்திய தலைமை தேர்தல் ஆணையராக தமிழ்நாட்டை சேர்ந்த பி.எஸ். சம்பத் இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். தேர்தல் ஆணயத்தில் 3 பேர் இருப்பார்கள். இதில் இதில் 2 பேர் தேர்தல் ஆணையராகவும் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையராகவும் இருப்பார்கள். தேர்தல் சம்பந்தமாகவோ அல்லது வாக்காளர்கள் சம்பந்தமாகவோ தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 ஆணையர்களும் சேர்ந்து முடிவு செய்வார்கள். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுமேயானால் தலைமை தேர்தல் ஆணையர் எடுக்கும் முடிவுதான் இறுதியானதாகும். இது இந்திய அரசியல் சட்ட அதிகாரம் படைத்ததாகும். இதன் செயல்பாட்டில் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ தலையிட முடியாது. சுயாட்சி அதிகாரம் படைத்தது. இதன் தலைவரை மத்திய அரசின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி நியமிக்கிறார். தலைமை தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி நேற்றுடன் ஓய்வு பெற்றுவிட்டார். புதிய தலைமை தேர்தல் ஆணையராக சம்பத் நியமிக்கப்பட்டார். இதற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்துவிட்டார். புதிய தலைமை தேர்தல் ஆணையரை ஒரு குழு அமைத்து அதன் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தார். இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியும் ஆதரவு கொடுத்தார். ஆனால் அவர்கள் பேச்சை மத்திய அரசு கேட்கவில்லை. இந்தநிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சம்பத் பதவி ஏற்றுக்கொள்கிறார். டெல்லியில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அவர் பதவி ஏற்றுக்கொள்கிறார். தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சம்பத் கடந்த 1070-ம் ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். இவர் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசு துறைகளில் பொறுப்பு வகித்து அனுபவம் வாய்ந்தவர். இவரது திறமையை பார்த்து கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் ஆணையராக சம்பத்தை மத்திய அரசு நியமித்தது. தற்போது குரேஷிக்கு பதில் இவர் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு ஏற்கிறார். இவர் இந்த பதவியில் ஏறக்குறைய 3 ஆண்டுகள் நீடிப்பார் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்