முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: முதல்வர் நடத்தி வைக்கிறார்

புதன்கிழமை, 13 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூன்.14 - திருவேற்காட்டில் வரும் 18-ம் தேதி 1006 ஜோடிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இலவச திருமணத்தை நடத்தி வைக்கிறார். தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் வரும் 18-ம் தேதி 1006 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சென்னை அருகே உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் அருகே 9 ஏக்கர் பரபரப்பளவில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார். வருகிற 18-ம் தேதி (திங்கள்) 9.30 மணி முதல் 10.29 மணிக்குள் திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ள ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும். வெள்ளி மெட்டி, புடவை, வேஷ்டி, துண்டு, சட்டை, பித்தளை காமாட்சி விளக்கு எவர்சில்வர் குங்கமசிமிழ், குடம், சாப்பாட்டு தட்டு, அன்னக்கரண்டி, பாய், தலையணை உட்பட 29 பொருட்கள் இடம் பெறுகின்றன. இந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்த முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறார். திருமண நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கப்பட்டு வரும் பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் இந்து அறநிலையத்துறை அரசு செயலர் ராஜாராம், ஆணையர் சந்தானகுமார், கூடுதல் ஆணையர் தனபால்,திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் ராஜா, ஆவடி எம்.எல்.ஏ. அப்துல் ரஹீம், சென்னை துணைமேயர் பெஞ்சமின், திருவேற்காடு நகராட்சி தலைவர் மகேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். மேலும் நகர அ.தி.மு.க. செயலாளர் சத்திய நாராயணன், மாவட்ட அ.தி.மு.க. துணைச்செயலாளர் சீனிவாசன் உட்பட பல கட்சி பிரமுகர்களும் சென்றிருந்தனர். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் காலங்களில் முதல்வர் ஜெயலலிதா இலவச திருமணங்களை நடத்தி வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு 1008 ஜோடிகளுக்கும் 2003-ம் ஆண்டு 1053 ஜோடிகளுக்கும் இலவச திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டன. மேலும் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 2500-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா திருமணங்களை நடத்தி வைத்ததோடு அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்