முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாடப்புத்தகத்தில் கேலிச்சித்திரம் நீக்க முதல்வர் வலியுறுத்தல்

புதன்கிழமை, 13 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.14 - தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்திலுள்ள தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கேலிச் சித்திரத்தை உடனே நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 1965​ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்பதற்கு செயல்வடிவம் கொடுக்கும் அப்போதைய மத்திய அரசின் முயற்சியை இந்தி மொழி பேசாத மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், இதனை எதிர்த்து திராவிட இயக்கம் மிகப் பெரிய போராட்டத்தினை நடத்தியது. மத்திய அரசின் இந்த இந்தி திணிப்பினை எதிர்த்துப் பேசிய பேரறிஞர் அண்ணா, தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே பிற மொழியை நுழைக்கின்ற பேதமை, தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே பிற மொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்ரமம், இவைகளைக் கண்டித்து அந்த அக்ரமத்தை நீக்குவதற்கு வழி காண வேண்டும் என்று கூறினார்.   

இந்தப் போராட்டத்தினையடுத்து, ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளுமே தொடர்ந்து மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக இருக்கும் என உறுதிமொழி அளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணமாயிருந்த, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பன்னிரண்டாம் வகுப்பிற்கான அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பிராந்திய விழைவுகள் என்ற அத்தியாயத்தில், திராவிட இயக்கம் என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கேலிச் சித்திரம் அமைந்துள்ளது.  இது மட்டுமல்லாமல், இந்தி திணிப்பு போராட்டத்தினை முன்னின்று நடத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மொழிப்போர் தியாகிகளை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.   இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், அதன் உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டும் வகையிலும், அன்றைய தி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த புகைப்படம் மேற்படி புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இதற்கு முற்றிலும் மாறாக, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்தக் கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது.  இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  திராவிட இயக்கம் குறித்து மாணவ  மாணவியருக்கு விளங்கச் செய்ய வேண்டுமெனில், அதற்கான பாடப் புத்தகத்தில் உண்மை நிலையை விளக்கும் அப்போதைய புகைப்படங்கள் தான் சிறந்த கருவியாக அமையுமேயொழிய, கேலிச் சித்திரத்தை வரைந்து அதில் தமிழக மாணவர்களுக்கு இந்தி படிப்பது கட்டாயமில்லை என்பன போன்ற உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டது போலவும், அவை ஆங்கிலத்தில் உள்ளதால், தமிழ் மாணவருக்கு ஆங்கிலமும் படிக்கத் தெரியாது என்று ஒருவர் சொல்வது போலவும் வாசகங்களை எழுதி, தமிழர்களின் மனதினை புண்படுத்துவது பொருத்தமாக அமையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் அந்த கேலிச்சித்திரம் இந்தித் திணிப்பை எதிர்த்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் ஏற்றுக்கொள்ள இயலாததாகும். தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல, யாரையும் தாழ்த்துவதல்ல என்ற பேரறிஞர் அண்ணாவின் அமுத மொழியினை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டி, இந்தி திணிப்பு போராட்டம் குறித்து தமிழர்களின் மனதினை புண்படுத்தும் வகையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பன்னிரண்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள கேலிச் சித்திரம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்