முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு வங்கி தனி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  தலைமையில் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் மற்றும்  மண்டல இணைப்பதிவாளர்களின் ஆய்வுக் கூட்டம் 14.6.2012 அன்று  சென்னை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது: நடப்பாண்டில் கூட்டுறவின் மூலம் ரூ.4,000 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில் 7.6.2012 வரை ரூ.308.37 கோடி பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக் குறியீட்டை எய்திட ஏதுவாகவும், புதியவர்களுக்கு பயிர்க் கடன்களை வழங்கிடவும் திட்டமிட்டு பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அதாவது பால்பண்ணை அமைத்தல், பண்ணை ஆடுகள் வளர்ப்பு, வெண்பன்றி, முயல் வளர்ப்பு மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு நடப்பாண்டில் ரூ.300 கோடி அளவிற்கு கடன் வழங்கிட குறியீடு  நிர்ணயிக்கப்பட்டதில், 31.5.2012 வரையில் ரூ.26.54 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வேளாண் பொருள்களின் மீது தானிய ஈட்டுக் கடன் பெற ஏதுவாக நடப்பாண்டில் ரூ.185 கோடி அளவிற்கு குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில், 31.5.2012 வரையில் ரூ.15.06 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்ய மைய வங்கியியல் கணினி சேவை முறை  செயல்படுத்த  தக்க நடவடிக்கைகளை உடன் எடுத்து விரைவாக பணியை முடித்திட வேண்டும்.

மேலும் சட்டமன்றப் பேரவையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்தபடி, புறநகர் பகுதிவாழ் மக்களுக்கு கூட்டுறவு கடன் கிடைக்கும்வகையில் 25.5.2012 அன்று, கோவை மாவட்டத்தில் வேலாண்டிபாளையம், கணபதி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில்  கோவூர், கொளப்பாக்கம், அய்யப்பந்தாங்கல், மேடவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்களாக செயல்பட்டு வருகின்றன.

கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் 78 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் 22 நகரக் கூட்டுறவு வங்கிக் கிளைகள் நவீனமயமாக்கப்படும் என அறிவித்ததிற்கிணங்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் விரைந்து நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதேப்போன்று, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக 27 புதிய கிளைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பெரும்பான்மையான மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பு கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும்.

அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, 41 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் வாழ்திறனை மேம்படுத்த  தலா ரூ.50 இலட்சம் வீதம் மானிய வட்டி விகிதத்தில் சிறப்புக் காசுக் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து அதன் வாழ்திறனை உயர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் நடப்பாண்டில் முறையே ரூ.2400 கோடி, ரூ.590 கோடி மற்றும் ரூ.950 கோடி வைப்புத்தொகையாக திரட்ட குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை எய்திட வங்கிகளின் தனி அலுவலர்களும், செயலர்களும் ஈடுபாட்டுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டனர்.

நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருட்டுப் போகாமல் பாதுகாக்க 50 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் 16 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கும் 52 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இரும்புப் பெட்டகங்கள் நிறுவுவதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கூட்டுறவு வங்கிகள் கடன்களை வழங்குவதுடன் மட்டுமன்றி, கொடுத்த கடன்களை கடன்தாரர்களிடமிருந்து தவணை காலத்திற்குள் வசூலித்து, சிறப்பாகச் செயல்பட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

வணிக வங்கிகளுக்கு இணையாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.  நடப்பாண்டில் 31.12.2012க்குள்  அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் கணினிமயமாக்கும் பணி முடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும், கிடங்குகள் கட்டுதல், அச்சகங்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில், பொது விநியோகத் திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றுவதில் கூட்டுறவுகளின் பங்கு மகத்தானது. எனினும், அரிசி நுகர்வு அதிகம் உள்ள கடைகளில் தீவிர ஆய்வு செய்து, அரிசி கடத்தலைத் தடுத்திடுமாறும், உண்மையான குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தின் போது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், சட்டப்ர்வ நிதிகளுக்கு ரூ.54.60 இலட்சத்திற்கான காசோலைகளை  அமைச்சரிடம் வங்கியின் தனி அலுவலர் சா.கரிகாலன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா,  கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அண்ணாமலை, மற்றும் கூடுதல் பதிவாளர்கள்  க.பு.பெ.பன்னீர்செல்வன், அசோகன், அ.சங்கரலிங்கம்,  இரா.ராஜேந்திரன், கே.பாலசுப்பிரமணியம், எம்.ப்பி.சிவனருள், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்