முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதியோர்களை தவிக்கவிடும் பழக்கம் இங்கு கிடையாது

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்15 - முதியோர்களை தனியாக தவிக்கவிடும் பழக்கம் இந்த மண்ணில் கிடையாது என்று  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொன்ன வைக்கோ கூறினார். சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் முதியோருக்கு எதிரான அவமதிப்பு மற்றும் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஹெல்ப்  ஏஜ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் சென்னை குற்றப்பிரிவு கமிஷனர் அபய் குமார் சிங்,  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொன்னவைக்கோ மற்றும் ஹெல்ப் ஏஜ் தமிழ்நாடு​கர்நாடகா இயக்குநர்அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  துணைவேந்தர் பொன்னவைக்கோ பேசியதாவது:-

வயதானவர்கள் கொடுமையைத் தடுக்க உருவாக்கப்பட்டதுதான் இந்த ஹெல்ப் ஏஜ் நிறுவனம் முதியோர்களை தனியாக தவிக்க விடும் பழக்கம் இந்த மண்ணில் கிடையாது. சங்க இலக்கியங்களில் முதியோர்களை மதிக்கும் பழக்கம் சம்பந்தமாக சிறப்பாக கூறப்பட்டுள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இருந்த தமிழர்கள் இப்போது எப்படி மாறினார்கள். கிராமத்தில் இல்லாத குடும்பங்களை பிரித்தாளும் பழக்கம் முதன் முதலில் நகரத்தில் தான் உருவானது. அதுவும் மேலைநாடுகளில் உள்ள பழக்கவழக்கம் நகரத்தில் பரவி குடும்பங்களை பிரித்தாளும் நிலைக்கு வந்துள்ளது. நம்நாட்டில் தான் தாய்மொழியை பயிலாமல் பிற மொழியை பயிலும் பழக்கம் உள்ளது. மேலைநாட்டு மோகம்போல் மேலைநாட்டு மொழி மோகமும் வெகுவாக நமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. அதுதான் இன்று முதியோர்களை தனியாக தவிக்கவிடும் பழக்கத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ்மொழியை பயின்றால்தான் நமது கலாச்சாரம், பண்பாடு பற்றி தெரியும். பிறரிடத்தில் அன்பு கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியதைப் படித்தாலே முதியோர்களை பிரித்து வைக்கும் பழக்கம் நமக்கு வராது. தமிழை பிரதானமாக பயில வைக்க நமது கல்வி திட்டத்தை மாற்ற வேண்டும் என்று துணைவேந்தர் கூறினார்.

குற்றப்பிரிவு கமிஷனர் அபய்குமார் சிங் பேசுகையில், ஒருநாள் அனைவரும் முதியோர்களாக ஆகப்போகிறவர்கள்தான். கூட்டுக் குடும்பம் என்பது ஒரு சிறந்த பள்ளி போன்றது. கமிஷனர் அலுவலகத்திற்கு முதியோர்கள் தொடர்பாக தினமும் ஒவ்வொரு விதமான புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றது. பெரும்பாலும் வருமானம் பற்றாக்குறைதான் முக்கியமான காரணமாகின்றது. பெற்றோர்கள் எந்த வருமானமும் இல்லாமல் இருக்கின்றனர் என்று பிள்ளைகள் குறை கூறுகின்றனர். மேலும் ஹெல்ப் லைன் தொடர்பாக தெரியாது என்று முதியோர்கள் கூறுகின்றனர். எனவே ஹெல்ப் லைன் சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல்துறையினர் முதியோர்களிடம் நண்பர்களாக பழகுகின்றனர் என்றார்.

நிகழ்வில் முதியோருக்கு எதிரான அவமதிப்பு மற்றும் கொடுமைகள் பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்