முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சியின் ஒராண்டு சாதனைக்கு கிடைத்த வெற்றி

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - அனைத்திந்திய அண்ணா தி.மு.க. ஆட்சியின் ஒராண்டு சாதனைக்கும்  நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என்று புதுக்கோட்டை இடைத் தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:-

12.6.2012 அன்று நடைபெற்ற புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில், எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை, வளர்ச்சித் திட்டங்களை மனதில் நிலை நிறுத்தி, எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, கழக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை மகத்தான வெற்றி பெறச் செய்த புதுக்கோட்டை தொகுதி வாழ் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.  2011​ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, புதுக்கோட்டை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் 47 விழுக்காடு வாக்குகள் பெற்றதையும்,  தற்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்தே போட்டியிட்டு 71 விழுக்காடு வாக்குகள் பெற்றிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி 24 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது. அதே சமயத்தில், தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் சேர்ந்து 29 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன.  மொத்தத்தில், எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி கணிசமாக குறைந்துள்ளது.  இந்தத் தேர்தலில் போட்டியிடாத திமுக​வின் வாக்குகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக விழுந்திருந்த சூழ்நிலையிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 71 விழுக்காடு வாக்குகளை பெற்றிருப்பது, மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் தான் என்பதை எடுத்துக் காட்டுகிறது.  இது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் ஓராண்டு சாதனைக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி. கழக வேட்பாளரின் வெற்றிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்த கழக தேர்தல் பணிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கும்;  கழக வேட்பாளரின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்