முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

புதுக்கோட்டை. ஜூன்.16 - புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் அமோக வெற்றி பெற்றார். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வலது கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ முத்துக்குமரன் சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக உள்ளிட்ட சில கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமானும், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேனும், ஐ.ஜே.கே சார்பில் சீனிவாசனும், இவர்கள் தவிர 13  சுயேட்சைகளும் போட்டியிட்டனர். இருப்பினும் கார்த்திக் தொண்டாமானுக்கும், ஜாகீர் உசேனுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவியது. அதிமுக சார்பில் 32 அமைச்சர்கள் உள்ளிட்ட 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 9ந்தேதி முதல்வர் ஜெயலலிதா புதுக்கோட்டை வந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். 

மிகவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் 10ந்தேதி மாலையுடன் ஓய்ந்தது. 12ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை வெப் கேமராக்கள் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்தப்படி இருந்தனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

புதுக்கோட்டை தொகுதியில் மொத்தம் 73.48 சதவீத வாக்குகள் பதிவாகியது. 1 லட்சத்து 43 ஆயிரத்து 277 பேர் வாக்களித்துள்ளனர். இவர்களில் ஆண்கள் 69 ஆயிரத்து 259 பேர், பெண்கள் 74 ஆயிரத்து 18 பேர். வாக்குகள் பதிவான எந்திரங்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டிருந்தன. 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதையடுத்து நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முன்னதாக பதிவான மின்னணு எந்திரங்கள் 10 மேஜைகளில் வைக்கப்பட்டன.

ஒரு மேஜைக்கு 3 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தபால் ஓட்டு எண்ணும் பணிக்கு தனியாக தேர்தல் பணியாளர் நியமிக்கப்பட்டிருந்தனர். 23 சுற்றுகலாக என்னப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் அந்தந்த மேஜைகளில் உள்ள தேர்தல் பணியாளர்கள் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் அதில் வைக்கப்பட்டிருந்த சீல்களை அகற்றினர்.

பின்னர் அந்த எந்திரங்களில் பதிவான மொத்த வாக்குகள் விபரமும் தேர்தல் பணியாளர்கள் வைத்திருந்த பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகு தபால் ஓட்டுகளை முதலில் எண்ணும் பணி தொடங்கியது. 

இதில் பதிவான தபால் ஓட்டுகளில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 97 ஓட்டுக்களும், தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் 2 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். 9 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

இதன் பிறகு 10 மேஜையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்களின் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது.

இதில் கார்த்திக் தொண்டைமான் (அதிமுக), தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனை விட 71,498 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றிபெற்றார். 

இதில் கார்த்திக் தொண்டைமான் பெற்ற மொத்த வாக்குகள் 101998, தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் 30,500 வாக்குகள் பெற்றிருந்தார். வித்தியாசம் 71,498 ஆகும். இதில் மொத்த வாக்குகள் 143346. 

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி சி.முத்துமாரி வழங்கினார். அப்போது தேர்தல் பார்வையாளர் (பொது) பிரேம்சிங் மெக்ரா, அமைச்சர் சுப்பிரமணியன், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் என்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.விஜயகுமார், மு.ராஜநாயகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகலாமல் இருக்க மாநகர போலீஸ் சார்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அதிமுக  வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றிபெற்றதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியில் இருந்த கட்சி தொண்டர்கள் கார்த்திக்  தொண்டைமானை தோலில் தூக்கிக்கொண்டு அம்மா வாழ்க.. அம்மா வாழ்க என்று ஆரவாரம் செய்தனர். மேலும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பரிமாரிக்கொண்டனர். அங்கு கூடியிருந்த ஏராளமான பெண்கள் அதிமுக சேலை கட்டிக்கொண்டு கூட்டமாக குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்