முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

63 காங்கிரஸ் வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்வோம்-சீமான்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம்,மார்ச்.- 31 - தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்வோம் என்று நாம் தமிழர் இயக்க நிறுவனர் சீமான் பேசினார்.  ராமேஸ்வரத்தில் நாம் தமிழர் இயக்க பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நிறுவனர் சீமான் பேசியதாவது, 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், நாம் தமிழர் இயக்கத்திற்கும் நடக்கும் தேர்தல் யுத்தமாகும். ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஹசன் அலியை தோற்கடிப்போம். தமிழ் மீனவர்களை ஐஸ் கட்டியில் படுக்க வைத்து திருக்கை வாலால் அடித்து ஏராளமான மீனவர்களை சுட்டுக் கொன்ற சிங்கள அரசுக்கு ஆதரவானவர் ஹசன் அலி. நாம் தமிழர் இயக்க கட்சியினர் சாகும் வரை காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நிற்போம். மத்திய அரசின் கையாளான கருணாநிதி அரசு பொய் வழக்கு போட்டு வருகிறது. தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை அரசை இந்தியாவின் வலிமை மிக்க கடற்படை ராணுவம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறது. 

ராமநாதபுரம் மாவட்டம் வீர மறவர் கூட்டத்தை உள்ளடக்கிய மாவட்டமாகும். இதில் ஹசன் அலிக்கு வேலையில்லை. இதே போல எல்லா தொகுதிகளிலும் காங்கிரசை தோற்கடிப்பதில் நாம் தமிழர் இயக்கம் பெரும்பாடு படும். என் மக்கள் என் இனம் என்று நாம் தமிழர் இயக்கம் செயல்படுகிறது. எதை எதையோ இலவசமாக வழங்கும் இவர்கள் மின்சாரத்தை ஏன் வழங்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தி.மு.க. மற்றும் ஏனைய கட்சிகளும் கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்சினைகள் போன்றவற்றில் தமிழர்களுக்கு எதிரான முடிவை எடுத்து விடுவார்கள். காங்கிரஸ் கட்சியை அறவே ஒழிப்பதுதான் நாம் தமிழர் இயக்கத்தின் வேலையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்