முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

560 புதிய பேருந்துகள், 304 புதிய தடங்கள் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 20 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (19.6.2012) தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 560 புதிய பேருந்துகள், 266 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், 304 புதிய வழித்தடங்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு முதன்முறையாக கட்டணமில்லா கையடக்கப் பேருந்துப் பயண அட்டை(பஸ் பாஸ்) வழங்கும் திட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சிற்றூர் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் அளிக்கப்பட்டு வருகின்றது.  அரசு போக்குவரத்துக் கழகங்கள் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 10 லட்சம் பயணிகள் பயணிக்கின்ற அளவில் 19 ஆயிரத்து 507 பேருந்துகளை இயக்கி வருகின்றன. பொதுமக்களின் தேவைகளுக்கேற்ப, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அவ்வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், 560 புதிய பேருந்துகள், 266 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் 304 புதிய வழித்தடங்களை  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,  பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களின் நலன் கருதி, 30 லட்சத்து 36 ஆயிரம் மாணவ மாணவியர்களுக்கு முதன்முறையாக கட்டணமில்லா கையடக்கப் பேருந்துப் பயண அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா கையடக்கப் பேருந்து பயண அட்டைகளை நேற்று வழங்கினார். மேலும், பணியில் இருக்கும்போது, இறந்துபோன 400 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, ஏற்கனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 338 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை மற்றும் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்துவரும் 4,511 பதிலி ஓட்டுநர்கள், 4,558 பதிலி நடத்துநர்கள், 88 பதிலி தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 9,157 பதிலி பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளையும், 2,316 ஓய்வு பெற்ற போக்குவரத்துப் பணியாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய 47 கோடியே 71 லட்சம் ரூபாய் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையினையும்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நேற்று  வழங்கினார். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, போக்குவரத்து முதுகெலும்பாக விளங்கி வருகிறது. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காக 45 வயதிற்கு மேற்பட்ட 22,803 அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு தமிழகத்தில் முதன்முறையாக முழு உடல்பரிசோதனை திட்டத்தினை  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து கட்டணமில்லா கையடக்கப் பேருந்துப் பயண அட்டைகளை பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகளும், பணி நியமன ஆணை மற்றும் பணி நிரந்தர ஆணைகள், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையினையும் பெற்றுக் கொண்ட போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த  நன்றியினை  முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், போக்குவரத்துத்துறை ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்