முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளர் சங்மாவுக்கு பாரதிய ஜனதாவும் ஆதரவா?

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.- 20  - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மாவுக்கு பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவளிக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான முடிவு இன்று நடக்கும் தே.ஜ.கூட்டணி கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரதீபா பாட்டீலின் பதவி காலம் ஜூலைமாதம் முடிவதையொட்டி புதிய ஜனாத்பதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். அவரை முலயாம் சிங் கட்சி, மாயாவதி கட்சி, தி.மு.க. போன்ற கட்சிகள் ஆதரிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா சில வாரங்களுக்கு முன் தமிழகம் வந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தமக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த வேண்டுகோளை தமிழக முதல்வரும் ஏற்றுக்கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சங்மாவை தாம் ஆதரிப்பதாகவும் இதேபோல் மற்ற தலைவர்களும் ஆதரிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். மேலும் அத்வானி போன்ற தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சங்மாவுக்கு அவர் ஆதரவு கேட்டார். இந்த சூழ்நிலையில் தான் பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த விஷயத்தில் ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாய ம் பா.ஜ. கூட்டணிக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இக்கூட்டணி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். ஆனால் அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் மறுநாள் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை 3 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டிய கலாம் முடிவில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார். கலாம் தான் வேட்பாளர்  அவர் போட்டியிட வேண்டும் என்று ஏற்கெனவே மம்தா பானர்ஜி வலியுறுத்தி வந்தார். ஆனால் கலாம் அதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் மம்தாவின் நிலை என்ன என்பது புரியவில்லை. பா.ஜ.க.வின் நிலையும் புரியாத புதிராக உள்ளது. இருந்தாலும் கலாம் போட்டியிட மறுத்துவிட்டதால் ஜெயலலிதா கேட்டுக்கொண்ட படி சங்மாவையே ஆதரித்துவிடுவது என்ற முடிவிற்கே பா.ஜ.க. தலைவர்கள் வந்துவிட்டதாக தெரிகிறது. அநேகமாக இது தொடர்பான முடிவை பா.ஜ.க. தலைவர்கள் இன்று கூடி எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு சங்மாவை பா.ஜ.க. ஆதரித்தால் அது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றியாகும். எது எப்படியோ பா.ஜ.க.வின் முடிவு இன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்மாவை பா.ஜ.க. ஆதரித்தால் போட்டியும் சற்று கடுமையாக இருக்கலாம்.

-------------------- 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்