முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜி சரியான வேட்பாளர்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூன். - 20 - ஜனாதிபதி பதவிக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சரியான வேட்பாளர்தான் என்று சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். இதே போல் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மூன்று முறை கேட்டுக் கொண்டார். ஆனாலும் அப்துல் கலாம் அதை ஏற்கவில்லை. இத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். எனவே அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து தே.ஜ. கூட்டணி ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு சரியான வேட்பாளர்தான் என்று சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு எல்லோரும் ஏகமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பால்தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து தமது கட்சிப் பத்திரிகையில் அவர் எழுதியிருப்பதாவது, நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். பிரணாப் முகர்ஜியை எல்லோரும் இணைந்து ஒருமனதாக ஆதரிப்போம். நாமெல்லாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதை இந்த உலகத்திற்கு தெரிவிப்போம். இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்கத்தக்கதல்ல. அரசியல் ஆதாயங்களுக்காக நாட்டின் கவுரவத்தை விட்டுக் கொடுக்க கூடாது. தகுதியில்லாதவர்கள் எல்லாம் போட்டியில் இருக்கிறார்கள். எனவே தகுதியான ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு தனது சாம்னா பத்திரிகையில் அவர் எழுதியுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜிக்கு சரியான தேர்வு என்று மத்திய அமைச்சர் நாராயணசாமியும் கூறியுள்ளார். பாரதீய ஜனதாவால் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அந்த தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஒலிக்கின்றன. எனவே உறுதியான முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க திணறுகிறது என்றும் நாராணசாமி கூறியுள்ளார். பிரணாப் முகர்ஜியை தேர்வு செய்திருப்பது உகந்த ஒன்று. காரணம், அவர் மூத்த தலைவர் மட்டுமல்ல, தகுதிவாய்ந்த தலைவரும் கூட. இவ்வாறு நாராயணசாமி தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்