முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் கோடநாடு வந்தார்: அ.தி.மு.க.,வினர் வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, ஜூன்.22 - தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு வந்ததையொட்டி அ.தி.மு.க.,வினர் ஆடிப்பாடி உற்சாகத்துடன் பிரமாண்டமான முறையில் வரவேற்பு கொடுத்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்திலில் அவருக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 12 மணிக்கு கோடநாடு வந்தார். கோடநாடு எஸ்டேட்டில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கிய அவருக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், நீலகிரி எஸ்.பி.,நிஜாமுதீன் ஆகியோர் மலர்கொத்துக்களைக் கொடுத்து வரவேற்பு கொடுத்தனர். அவர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அதன்பின்னர் அங்கிருந்து கார்மூலம் கோடநாடு பங்களாவிற்கு சென்றார். அப்போது சாலையில் வழிநெடுகிலும் செண்டை வாத்தியம், காவடி ஆட்டம், பாண்டு வாத்தியம் ஆகியவற்றை வாசித்தும், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனங்களை ஆடியும் புரட்சித்தலைவி அம்மா வாழ்க என வாழ்த்துக்கோஷங்களை எழுப்பியும் அ.தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்றனர். எஸ்டேட் பங்களா அருகே முதல்வரின் கார் வந்தபோது அங்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், முன்னாள் அமைச்சர்கள் புத்தி சந்திரன் எம்.எல்.ஏ.,அ.மில்லர், ஏ.கே.செல்வராஜ், மாவட்ட கழக அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன், ஏடிபி மாநில செயலாளர் ஜெயராமன், மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் பாரதியார், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், கோடநாடு ஊராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர் மலர்கொத்துக்களை கொடுத்து வரவேற்றனர். அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளிடம் மலர்கொத்துக்களை புன்முறுவலுடன் பெற்றுக்கொண்ட பின், கோவை காந்திபுரத்தில் உள்ள சக்தி விநாயகர் ஆலய குருக்கள் ரவிச்சந்திரன், உமாபதி ஆகியோரால் வழங்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் பங்களாவிற்குச் சென்றார். 

தமிழகத்தில் 3-வது முறையாக பொறுப்பேற்றபின் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வருகைதந்ததையொட்டி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் படுகர் இன மக்கள் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அர்ஜுணன் தலைமையில் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இதில் ஏராளமான அ.தி.மு.க.,நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் மகிழ்ச்சியை ஆடிப்பாடி கொண்டாடி வெளிப்படுத்தினர். தமிழக முதல்வர் வருகையால் கோடநாடு பகுதி திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. 

முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு நிகழ்ச்சியில் ஏடிபி மாநில செயலாளர் ஜெயராமன், விவசாய பிரிவு மாநில துணை செயலாளர் பாரதியார், மாவட்ட கழக பொருளாளர் குலாப்ஜான், பேரவை மாவட்ட செயலாளர் பால நந்தகுமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், இணை செயலாளர் சிவக்குமார், பாசறை மாவட்ட செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர்கள் பச்சநஞ்சன், ஸ்டீபன், குமார், மோகன்ராஜ், உலிக்கல் சிவாஜி, பத்மநாபன், நகர செயலாளர்கள் ராஜாமுகமது, சத்தார், மருத்துவ அணி மாவட்ட இணை செயலாளர் டாக்டர் கணேஷ்சந்தீப், மகேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் மேனகா, ஊட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, துணைத்தலைவர் மோகன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் வாப்பு, குன்னூர் நகர்மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் எல்.மணி, கேத்தி பேரூராட்சி தலைவர் மகேஷ்வரி, துணைத்தலைவர் சுதேவன், பேரூராட்சி செயலர் கண்ணபிரான் உட்பட அ.தி.மு.க.,நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.    

முதல்வர் கோடநாடு வருகையையொட்டி கோவை சரக டி.ஐ.ஜி. ஜெயராம் நேரடி மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட எஸ்.பி.,நிஜாமுதீன், திருப்பூர் எஸ்.பி.,அஸ்வாகார்க் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்