முக்கிய செய்திகள்

இஸ்லாமிய மக்களின் இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் - ஜெயலலிதா

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
31jaya17

 

வேலூர், ஏப்.1 - வருகிற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டினை உயர்த்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், தி.மு.க. ஆட்சியில் இட ஒதுக்கீடு ஒழுங்காக நடைமுறைப் படுத்தவில்லை என்று ஜோலார்ப்பேட்டை பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கூறினார். வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று (வியாழக்கிழமை) பிரச்சாரம் செய்தார். வேலூர், ஜோலார்ப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த பிரசார பொதுக் கூட்டங்களில் ஜெயலலிதா கலந்துகொண்டு பேசினார். 

முதலாவதாக, நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஜெயலலிதா தனி ஹெலிகாப்டரில் வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள  சிறை அலுவலர்கள் அணிவகுப்பு மைதானத்திற்கு வந்து இறங்கினார். அங்கிருந்து பிரச்சார வேனில் ஏறி வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். 

இந்த பிரசார கூட்டத்தில், வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் விஜய், காட்பாடி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஆற்காடு அ.தி.மு.க. வேட்பாளர் வி.கே.ஆர். சீனிவாசன், அரக்கோணம் அ.தி.மு.க. வேட்பாளர் சு.ரவி, ராணிப்பேட்டை அ.தி.மு.க. வேட்பாளர் முகமது ஜான், சோளிங்கர் வேட்பாளர் (தே.மு.தி.க.) பி.ஆர்.மனோகர், கே.வி.குப்பம் வேட்பாளர் (இந்திய குடியரசு கட்சி) செ.கு.தமிழரசன் ஆகிய 7 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அப்போது அவர் பேசியதாவது-

தமிழகத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக விலை உயர்வுக்கு காரணமாக இருந்துள்ளார். பெட்ரோல் விலை 9 முறை ஏறிவிட்டது. இதனால் விலைவாசி கடுமையாக ஏற்றம் கண்டது. ரூ.15-க்கு விற்க வேண்டிய அரிசி ரூ.43-க்கும் ரூ.13-க்கு விற்க வேண்டிய சர்க்கரை ரூ.35-க்கும் ரூ.35-க்கு விற்க வேண்டிய உளுந்தம் பருப்பு ரூ.90-க்கும் ரூ.35-க்கு விற்க வேண்டிய புளி ரூ.110-க்கும் ரூ.150-க்கு விற்க வேண்டிய சிமெண்ட் ரூ.250-க்கும் விற்கப்படுகிறது. மணல் கொள்ளை மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வரை கொள்ளை போய் உள்ளது. மின்வெட்டு அதிகம் உள்ளது. ஆனால் மின்சாரம் உற்பத்திக்கு எந்தவித நடவடிக்கையும் எல்லை. இதனால் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ரவுடி கும்பல் காவல் துறையை மிரட்டி வருகிறது. காவல் துறை, ஏவல் துறையாக மாறி உள்ளது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல். தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. ரூ.1.80 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலை கருணாநிதி குடும்பம் செய்துள்ளது. கருணாநிதி பல வழிகளில் மக்களுடைய பணத்தை கொள்ளையடித்து வருகிறார்.

திருவாரூரில் இருந்து திருட்டு ரெயில் ஏறி சென்னை வந்த கருணாநிதிக்கு பலகோடி ரூபாய் எப்படி கிடைத்தது? பத்திரிக்கை, சினிமா, கேபிள் டி.வி., ரியல் எஸ்டேட் தொழில்கள் மூலம் பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பம் ஆக வேண்டும் என்று கருணாநிதிக்கு ஆசை. தமிழகத்தில் ஒரு குடும்பம் வளம் பெற 6 கோடி தமிழக மக்களை சீரழித்து வருகிறார். தமிழக மக்களை வாட்டி வதைத்து விட்டு தமிழகத்தையே தன்னுடைய குடும்ப சொத்தாக்க வேண்டும் என நினைக்கிறார் கருணாநிதி. இந்த தேர்தலில் கருணாநிதி குடும்பத்தை அப்புறப் படுத்த வேண்டும். 

பாலாற்றில் மணல் திருடப் படுவது அறவே களையப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடிக் கிடக்கும் அரசு மருத்துவ மனையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் பஸ் நிலையம் விரிவாக்கப்படும். சி.எம்.சி. அருகே சுரங்கப்பாதை அமைக்கப் படும். வேலூர் கொணவட்டம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். தொகுதி பிரச்சினைகள் தீர்க்கப் படும். சிறு பான்மை மக்களுக்கு தனியார் ஒரு துறை அமைக்கப்படும். இட ஒதுக்கீடு சரியாக வழங்கப் படுகிறதா என கண்காணிக்கப் படும்.  தமிழக மக்களுக்கு இலவசமாக 20 கிலோ அரிசி தரமாக வழங்கப்படும். பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். இதுபோல் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்துவோம். குடிநீர் பிரச்சினை தீர்க்கப் படும். நதிநீர் பங்கீடு பிரச்சினை தீர்க்கப் படும். விலைவாசி கட்டுப்படுத்தப் படும். தி.மு.க. ரவுடிகளால் பறிக்கப் பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கே ஒப்படைக்கப் படும்.

வருகிற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் விஜய் (வேலூர்), அப்பு (காட்பாடி), முகமது ஜான் (ராணிப்பேட்டை), சீனிவாசன் (ஆற்காடு), சு.ரவி (அரக்கோணம்), செ.கு.தமிழரசன் (கே.வி.குப்பம்), பி.ஆர்.மனோகர் (சோளிங்கர்) ஆகியோருக்கு ஓட்டு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிவசங்கரன், வேலூர் மாநகர செயலாளர் வேதகிரி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்கவும் அவரைக் காணவும் திரண்டு இருந்தனர்.

 

ஜோலார்ப்பேட்டை

 

இதையடுத்து, ஜெயலலிதா தனி ஹெலிகாப்டரில் ஏறி ஜோலார்ப்பேட்டை அடுத்த புதூரில் அமைக்கப் பட்ட ஹெலிபேட்டில் இறங்கினார். அங்கிருந்து அவர் பிரசார வேனில் ஏறி ஜோலார்ப்பேட்டைக்கு சென்று பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது-

வருகிற தேர்தலில் எம்.ஜி.ஆர். ஆசியாலும் மக்களின் நல்லாதரவினாலும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்த பிறகு நாட்ரம்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுக்கா உருவாக்கப்படும். ஜோலார்ப்பேட்டை ரெயில்வே மேம்பாலப் பணிகள் துரிதப்படுத்தப் படும். தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபான்மை இன மக்களுக்கு 2006-ஆம் ஆண்டு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். ஆனால் அதுவும் ஒழுங்காக நடைமுறைப் படுத்தப் படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்ததும் இஸ்லாமிய மக்களின் இட ஒதுக்கீடு உயர்த்தப்படும். மேலும் இட ஒதுக்கீடு முறையாக அமல் படுத்தப்படுகிறதா என கண்காணிக்கப் படும்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார். மேலும், ஜோலார்ப்பேட்டை தொகுதி  அ.தி.மு.க. வேட்பாளர் கே.சி.வீரமணி (வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்), திருப்பத்தூர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.வி.சம்பத்குமார், ஆம்பூர் வேட்பாளர் ஏ.அஸ்லம்பாஷா (மனித நேய மக்கள் கட்சி), குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கமுத்து, அணைக்கட்டு வேட்பாளர் வி.பி.வேலு (தே.மு.தி.க. மத்திய மாவட்ட செயலாளர்) ஆகிய 6 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: