முக்கிய செய்திகள்

கருணாநிதியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் - விஜயகாந்த்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
mani1

 

திருச்சி,ஏப்.1 - முதல்வர் கருணாநிதியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டேன் என்று நடிகர் ஸ்ரீரங்கத்தில் விஜயகாந்த் ஆவேசமாக கூறினார். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவை ஆதரித்து திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் அருகில் நடிகர் விஜயகாந்த் பேசியதாவது:-

இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அருகில் இருந்து பேசுகிறேன். ஸ்ரீரங்கம் புன்னியம் செய்த தொகுதி. ஸ்ரீரங்கத்தில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். நான் ஆதிஸ்ரீரங்கம் அடங்கிய ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறேன். கருணாநிதியை நாம் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் என்னை தி.மு.க.வினர் பாலோ அப் செய்துகொண்டிருக்கின்றனர். எனது கட்சிக்காரரை நான் தாக்கியதாக கருணாநிதியின் ஆதரவு டி.வி.க்களில் போட்டு காண்பிக்கிறார்கள். எனது கட்சி வேட்பாளரை நான் அடிக்கக்கூடாதா? நான் எம்.ஜி.ஆர். ரசிகன், மர்ம யோகி படத்தில் எம்.ஜி.ஆர். தவறுகளை தட்டிக்கேட்பார். அதேபோன்று நான் தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்பேன். 

என்னை பொறுத்தவரை எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன். அவர் தொடங்கிய அதிமுகவை விட்டுவிட மாட்டேன். கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு சரியாக கரன்ட் கொடுத்தாரா கருணாநிதி? வேலையாவது கொடுத்தாரா? கருணாநிதியும், அமைச்சர் நேருவும் கொள்ளையடித்து வைத்துள்ளனர். விட்டால் இங்குள்ள அகிலாண்டேஸ்வரி கோயிலையும், அங்குள்ள சிலையையும் அவர்கள் திருடி விற்று விடுவார்கள். கருணாநிதியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவரது வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றாமல் விட மாட்டேன். உலகத்திலேயே பெரிய பணக்காரர் கருணாநிதி, எனவே உலகத்தை ஆளும் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலையும், சிலையையும் திருடி விற்று விடுவார்கள். 

ஸ்ரீரங்கம் கொடுத்து வைத்த ஊர். இங்கு போட்டியிடும் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நிச்சயமாக ஜெயிப்பார். நானும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். அவரும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கருணாநிதி வீடா? தமிழ்நாடா என மக்கள் முடிவு செய்துகொள்ள வேண்டும். திமுக கூட்டணி ஜெயிக்க கருணாநிதி படுத்துக்கொண்டு அனுதாபத்தை தேடி ஜெயிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட கருணாநிதி உங்களையும் பெட்டில் படுக்க வைத்துவிடுவார் ஜாக்கிரதை. நல்லது செய்ய நினைக்கும் அதிமுக பொதுச்செயலாளரை நீங்கள் வெற்றி பெற செய்து, அவரை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: