முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் உள்துறை அமைச்சரகம் அருகே தீ விபத்து

திங்கட்கிழமை, 25 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜுன் - 25 - டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரகம் அருகே நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.  டெல்லியில் உள்ள வடக்கு பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளது.இந்த அமைச்சகத்திற்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் 102 வது மாநாட்டு அரங்கம் ஒன்றில் நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 8 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர், தீயை அரை மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இதேபோல பெரிய அளவில் பொருட்சேதமும் ஏற்படவில்லை. தீ பிடித்த இந்த கட்டிடத்திற்கு அருகில்தான் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய உள்துறை இணை அமைச்சர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், அரசு பணியாளர் துறை அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரின் அலுவலகங்கள் உள்ளன. இந்த தீ விபத்து ஏற்பட்டபோது இவர்கள் மூன்றுபேரும் அங்கு இல்லை. மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் உள்ளிட்ட அதிகாரிகளும்கூட  அலுவலகத்தில் இல்லை. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது ஒரு மைனர் தீ விபத்துதான் என்றும் டெல்லி தீயணைப்பு துறை இயக்குனர் தெரிவித்தார். இருந்தாலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மகாராஷ்ட்ராவில்  தலைமைச் செயலகம் உள்ள மந்த்ராலயா கட்டிடத்தில் சில நாட்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான அரசு கோப்புக்கள் எரிந்து நாசமாயின. இப்படிப்பட்ட சூழ்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சக அலுவலகம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்