முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப்புக்கு பிரியாவிடை: தலைவர்கள் நெகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 26: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் செயற்குழு நேற்று பிரியாவிடை கொடுத்து வழியனுப்பியது.டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம், ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக கூட்டப்பட்டது. இந்த செயற்குழுவில் பேசிய சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட அனைவரும் பிரணாப்தான் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் என்றும் அவரது கட்சிப் பணிகளை புகழ்ந்தும் புகழாரம் சூட்டினர். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இத்தனை ஆண்டுகாலம் பணியாற்றிய தமக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கான அனைவருக்கும் பிரணாப் முகர்ஜியும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி, நிதி அமைச்சர் பதவி மற்றும் மக்களவை உறுப்பினர் பதவி ஆகிய அனைத்தையும் ராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை பிரணாப் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் நிதியமைச்சர் பதவியிலிருந்து மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இதர பொறுப்புகளிலிருந்தும் பிரணாப் முகர்ஜிஇன்று விலகுகிறார்.

1978ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியில் உறுப்பினரானார் பிரணாப் முகர்ஜி. அன்று முதல் இன்று வரை கட்சியின் அசைக்க முடியாத முக்கியத் தலைவராக இருந்து வருகிறார். கட்சியின் பல்வேறு முக்கிய முடிவுகளில் பிரணாப் முகர்ஜியின் பங்கும் முக்கியமானது. குறிப்பாக சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸில் பிரணாப் முகர்ஜி முக்கியத் தலைவராக திகழ்ந்து வந்தார். கட்சிக்குள் ஏற்படும் பிரச்சினைகள், கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்படும் பிரச்சினைகள், ஆட்சி சந்தித்த சவால்கள் என பலவற்றுக்கும் பிரணாபின் உதவியையே சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் நாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்