முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் கமிஷனர்கள் நியமன விவகாரம்: மத்தியரசு முடிவு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.26 - தேர்தல் கமிஷனர்கள் ஒருமித்த கருத்துடன் நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனையை கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் கமிஷன் சுயாட்சி அதிகாரம் கொண்டதாக இருந்தாலும் அதற்கு தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் கமிஷனர்கள் மத்திய அரசின் சிபாரிசு அடிப்படையில் ஜனாதிபதி நியமிக்கிறார். 

இந்தநிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் கமிஷனர்கள் நியமிக்கப்படும்போது எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு ஒரு குழு அமைத்து அந்த குழுவின் ஒருமித்த கருத்தோடு நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கடிதம் எழுதியிருந்தார். அவரை அடுத்து வலது கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் குப்தாவும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து தேர்தல் கமிஷனை விடுவிக்க தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்படும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையொட்டி மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இதனையொட்டி தேர்தல் கமிஷனர்கள் நியமன விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக மத்திய அரசு விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளது. அந்த கூட்டத்தில் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் விவகாரம் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பதில் கடிதம் எழுத உள்ளதாக மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இதற்கு முன்பு இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்பட அனைத்து அரசுகளும் தேர்தல் கமிஷனர்கள் நியமன விஷயத்தில் பின்பற்றி வந்த விதிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் விரைவுபடுத்துமாறு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எல்.கே. அத்வானி எழுதிய கடிதத்தில் தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்களை 5 பேர் கொண்டு குழுவினர்களின் ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும் என்றும் அந்த குழுவில் பிரதமர், இந்திய தலைமை நீதிபதி, பாராளுமன்ற இருசபைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள், மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்