முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு சீனா கூறும் இரண்டு ஆலோசனைகள்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங்,ஜூன்.26 - இந்தியாவுடன் உறவு வலுப்பட எல்லைப்பிரச்சினையில் பொறுமையை கையாள்வது உள்பட இரண்டு யோசனைகளை சீனா தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் இதை நாம் சாத்தான் ஓதிய வேதமாகத்தான் கருத வேண்டும். இந்தியாவுக்கு எதிரான சதியில் பாகிஸ்தானும் சீனாவும் ஈடுபட்டு வருகின்றன. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் பாகிஸ்தானுடன் சீனா உறவு கொண்டாடி வருவதோடு நாட்டின் மேற்கு எல்லைப்பகுதியில் இந்தியாவுக்கு பலமான ஆயுத நாடாக பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் வடக்கிலும் கிழக்கிலும் சீனா தனது படை, ஆயுத பலத்தை பெருக்கி வருகிறது. இப்படியொரு பக்கம் இருக்க மறுபக்கத்தில் இந்தியாவுடன் பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளில் உறவை சீனா வளர்த்து வருகிறது. இந்தநிலையில் இந்திய பத்திரிகையாளர்கள் பெய்ஜிங் சென்றுள்ளனர். அவர்களுக்கு சீனா நாட்டு வெளியுறவு அமைச்சக உயரதிகாரி மா ஜிசெங் பேட்டி அளித்தார். இவர், இந்திய விவகாரத்தையும் கவனித்து வருகிறார். மா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் இந்தியாக்கும் எங்கள் நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைப்பிரச்சினையை தீர்ப்பது என்பது ரொம்ப கடினமான விஷயம். அதனால் இந்த பிரச்சினையில் இருநாடுகளும் பொறுமை காக்க வேண்டும். அதேசமயத்தில் இருநாடுகளிடையே பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளில் தொடர்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு வழிமுறைகளும் இருநாடுகளிடையே உறவை வலுப்படுத்துவதற்கு சிறந்தவை என்றும் மா கூறினார். இருநாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் மேலும் அதிகரித்து வந்தால் எல்லைப்பிரச்சினைக்கு எளிதாக தீர்வு கண்டு விடலாம் என்றும் மா மேலும் கூறினார். கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா மீது சீனா திடீரென்று படையெடுத்து சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டுள்ளது. அதேசமயத்தில் அப்படிப்பட்ட சீனா,பொறுமையாக இருக்க வேண்டும் என்று தற்போது கூறுவது ஏதோ இந்தியாவுக்கு எதிரான ராணுவ திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை போலும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்