முக்கிய செய்திகள்

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Congress 0

 

கிருஷ்ணகிரி,ஏப்.1 - கிருஷ்ணகிரி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹசீனா சையத் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதனால் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரது கணவர் சையத் கியாஸ் உல் ஹக் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகி உள்ளார். 

ஹசீனா சையத் தொகுதி உடன்பாட்டில் கிருஷ்ணகிரி தொகுதி ஒதுக்கப்பட்டதும் காங்கிரஸ் மேலிடத்தால் அறிவிக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ வேட்பாளராவார். ஆனால் சென்னையை சேர்ந்த அவர் தங்கள் தொகுதியில் போட்டியிடுவதை உள்ளூர் காங்கிரசார் விரும்பவில்லை. கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், மேலிடத்திற்கு 24 மணி நேர கெடுவையும் விதித்திருந்தனர். 

ஆனால் கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஹசீனா சையத் காங்கிரஸ் வேட்பாளராக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் மாற்று வேட்பாளராக அவரது கணவர் சையது கியாஸ் உல் அஹ் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் திடீரென ஹசீனா சையத்தை மாற்றி மக்பூல்ஜான் என்பவரை புதிய வேட்பாளராக மேலிடம் அறிவித்தது. ஆனால் குறித்த நேரத்தில் மக்பூல் ஜான் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. ஆனால் மேலிடத்தின் முடிவால் அதிருப்தியில் இருந்த மாவட்ட காங்கிரசார் 3 பேர் போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தனர். 

இவ்வாறு தொடக்கம் முதலே வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில் பரிசீலனை முடிந்து ஹசீனா சையத் போட்டியிடுவது உறுதியானது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத பரபரப்பு திருப்பமாக ஹசீனா சையத் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதனால் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த ஹசீனா சையத்தின் கணவர் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகி உள்ளார். வேட்பு மனுவை வாபஸ் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் ஹசீனா கூறும் போது, சோனியா காந்தியின் விருப்பப்படி என்னை இந்த தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்தார்கள். ஆனால் கட்சியின் உட்பூசல் காரணமாக எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதற்கு தங்கபாலுவே காரணம். வேட்பு மனு தாக்கல் செய்த என்னை வாபஸ் வாங்குமாறு மிரட்டினார். இதுவே எனது மன உளைச்சலுக்கு காரணம். 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்சினைக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவே காரணம், கிருஷ்ணகிரி தொகுதியில் எந்த வேட்பாளரை அறிவித்தாலும் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இங்குள்ளவர்கள் அனைவரும் மாவட்ட தலைவராக நினைக்கின்றனர். காங்கிரசார் கட்சியின் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை மதிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: