முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கு: மத்திய மந்திரி வீரபத்ர சிங் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.27 - ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுக் குள்ளாகியுள்ள முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான வீரபத்ரசிங் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டார். 

இமாசலப்பிரதேச மாநில காங்கிரஸ் முதல்வராக இருந்தவர் வீரபத்ர சிங். அப்போது இவரும் இவரது மனைவி பிரதீபாவும் சேர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி மொஹிந்தர் லால் மற்றும் சில தொழில் அதிபர்களிடம் பணபரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு அடங்கிய ஆடியோ சி.டி.யை காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் விஜய் சிங் மாங்கோத்தியா கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் வெளியிட்டார். இது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய முகாந்திரம் இருப்பதாகக் கூறி இப்போது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரபத்ர சிங் (78) மற்றும் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் மீது கூறப்பட்டுள்ள ஊழல் , சதி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து போதிய ஆதாரங்களும் முகாந்திரமும் இருக்கிறது. எனவே அவர்கள் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது என்று சிறப்பு நீதிபதி பி.எல்.சோனி அறிவித்தார். 

ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுவிட்டதால் வீரபத்ர சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

இதனையொட்டி மத்திய சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனத்துறை அமைச்சர் வீரபத்ர சிங் நேற்று பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். ராஜினாமா கடித்ததை பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏற்றுக்கொண்டார். வீரபத்ர சிங் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இந்த வழக்கின் விசாரணை உடனடியாக தொடங்குவதற்கான வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லை. தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வீரபத்ர சிங் இமாசலப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நிலுவையில் உள்ள இந்த மனு மீதான தீர்ப்பு வெளியான பின்னரே விசாரணை குறித்து கோர்ட்டு முடிவு செய்யும் என்று தெரிகிறது. வீரபத்ர சிங் தாக்கல் செய்துள்ள மனுவை கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி நீதிபதிகள் குரியன் ஜோசப், வி.கே.அகுஜா ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்