முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்துணவு மையங்களில் உணவு முறைகளில் மாற்றம்

புதன்கிழமை, 27 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.27 - சத்துணவு மையங்களில் உணவு முறைகளில் மாற்றம் கொண்டுவர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். இது குறித்த விபரம் வருமாறு:- சென்னை சைதாப்பேட்டையில் மாந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு சிறந்த உணவு தயாரிப்பாளர் டாக்டர் தாமு தயாரித்த சுவையான பலவகை உணவுகளை தயாரிக்கும் செயல்முறை விளக்கம் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். ஊரகத் தொழில் மற்றும் சத்துணவு அமைச்சர் எம்.சி.சம்பத் உணவு செயல்முறை விளக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு மையங்களில் சுவையான, சத்தான, சுகாதாரமான பல்வேறு உணவுகளை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இந்த உணவு செயல்முறை பயிற்சி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி உணவு தயாரிப்பாளர் டாக்டர் தாமு திருச்சி மாநகராட்சி பள்ளிகளில் உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு நேரடி செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளித்ததன் பேரில் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி தமிழ்நாட்டில் உள்ள 43 ஆயிரம் சத்துணவு சென்டர்களிலும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இந்த பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இதை முறையாக சத்துணவு பணியாளர்கள் பயன்படுத்தி கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சுவையான, சுத்தமான உணவினை வழங்கவேண்டும். அதன் அடிப்படையில் 13 வகை உணவு முறைகள் தயாரித்து ஒவ்வொரு நாளாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த பயிற்சி தொடர்பாக ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கு கையேடு, சி.டி. தயாரித்து வழங்கப்படும். அர்ப்பணிப்பு உணர்வுடன், சேவை மனப்பான்மையுடன் இந்த சமையல் தயாரிப்பு முறைகளை கற்றுக்கொண்டு சுவையான உணவுகளை தயாரித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் விரும்பி உண்ணும் வகையில் தயார் செய்யவேண்டும். இவ்வாறு விரும்பிய உணவுகளை வழங்குவதால் குழந்தைகள் சுத்தமான, சுகாதார உணவினை உண்பதால் உணவு வீணாவதும் தவிர்க்கப்படும். அதேபோல் மாணவர்களின் வருகை பதிவேடும் அதிகரிக்கிறது. அதனால் மாணவர்கள் கல்வியும் ஆர்வமாக கற்க வாய்ப்புள்ளது என்றார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:-

தமிழக முதல்வர் இந்தியாவிலேயே தமிழகத்தை முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொலைநோக்கு திட்டம்தான் விஷன் 2023 திட்டமாகும்.

இத்திட்டத்தின் முன்னோடி திட்டம்தான் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டமாகும். அதேபோல் சத்துணவு மையங்களில் மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையில் உணவு முறையில் தமிழக முதல்வர் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த உணவு முறை செயல்முறை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேயர் சைதை துரைசாமி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தமிழன், சத்துணவு முதன்மை செயலாளர் அசோக் டோங்ரே, சத்துணவு இயக்குநர் ஜோதி நிர்மலா, இணை ஆணையர் தி.ந.வெங்கடேஷ், மண்டலக் குழு தலைவர் எல்.ஐ.சி.மாணிக்கம், மான்ற உறுப்பிர்கள் என்.எஸ்.மோகன், ந.பாஸ்கர், முன்னாள் மன்ற உறுப்பினர் கடும்பாடி ஆகியோர் கலந்து காண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்