முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு பரப்பியவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது

வியாழக்கிழமை, 28 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.28 - மதுரை ஆதீன மடத்தில் புலித்தோல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதின் பேரில் அவதூறு பரப்பியவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார்.  மதுரை ஆதீன மடத்தில் புலித்தோல், யானை தந்தம் இருப்பதாகவும் இதை பறிமுதல் செய்து நித்தியானந்தா, ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் போலீசில் புகார் செய்திருந்தார். இது குறித்து விளக்குத்தூண் போலீசார்  வழக்குப்பதிவு செய்து ஆதீன மடத்தில் சோதனையிட்டனர். அப்போது புலித்தோலோ, யானை தந்தமோ எதுவும் இல்லை. இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறியதாவது,

   மதுரை ஆதீனமடத்தின் இளையஆதீனமாக நியமிக்கப்பட்டதில் இருந்து ஆதீன மடத்தின் புகழையும், பெருமையையும் சீர்குலைக்கும் வகையில் எதிர்ப்பாளர்கள் சிலர்தவறான கருத்துக்களை பரப்பி  வருகின்றனர். அந்த வகையில் சோலைக்கண்ணன் என்பவர் மதுரை ஆதீன மடத்தில் புலித்தோல், யானைத்தந்தங்கள் இருப்பதாக கூறி ஐகோர்ட் கிளையில் மனு செய்ததின் பேரில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆதீன மடத்தை போலீசார் சோதனை செய்தனர். மூத்த ஆதீனம் என்ற வகையில் போலீசாருக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். மடத்தில் உள்ள அனைத்து அறைகளையும் சுதந்திரமாக சோதனையிட அனுமதித்தேன். பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த சில பீரோக்களையும் நானே முன்னின்று உடைத்து திறந்து காட்டினேன். சோதனையில் எதுவும் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. இதன் மூலம் ஆதீனமடத்தை களங்கப்படுத்த முயற்சித்தவர்களின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஆதீனமடத்தை களங்கப்படுத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்