முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்...!

வியாழக்கிழமை, 28 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.28 - பள்ளி மாணவிகளிடம் தவறான முறையில் நடக்கும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களின் கல்வி சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

பள்ளிகளில் மாணவிகளுக்கு சில ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளிப்பதாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான புகார்களின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவும், அவர்களின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா வெளியிட்டுள்ள அரசாணை:

மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர் ஒழுக்க கேடான முறையில் நடந்து கொள்கின்றனர். இதனால் மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பள்ளி மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான முறையில் நடந்து கொள்வதை முழுவதும் தவிர்ப்பதற்காக கீழ்கண்ட பரிந்துரையை கடைபிடிக்க வேண்டும்.

அதாவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு கட்டாய ஓய்வு, டிஸ்மிஸ் போன்ற தண்டனை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மாணவ, மாணவிகள் மற்றவர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, அவர்களுக்கு ஆலோசகர்கள் மூலம் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளை களைய, பள்ளி கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்