முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லைக் கோடு வரை கைவிலங்கோடு வந்த சுர்ஜித்சிங்

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

லாகூர், ஜூன். 29 - உளவு பார்த்தாகக் கூறி பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட சுர்ஜித் சிங் நேற்று காலை லாகூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். வாகா எல்லையில் அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லை வரை அவர் கைவிலங்கோடு தான் அழைத்து வரப்பட்டார். சச்சா சிங் என்பவரின் மகனான சுர்ஜீத் சிங், கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் ஜியா உல் ஹக்கின் ராணுவ ஆட்சி நடந்தபோது அங்கு உளவு பார்த்ததாக சுர்ஜித் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 1985ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் 1989ம் ஆண்டு அப்போதைய பிரதமர் பெனாசிர் பூட்டோ பரிந்துரையின் பேரில், அதிபர் குலாம் இஷாக் கான் உத்தரவின் பேரில் அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவரை தற்போது பாகிஸ்தான் விடுவிப்பதாக அறிவித்தது.

ஆனால் அறிவிப்பு வெளியாகும் போது, தூக்கு தண்டனை கைதியான சரப்ஜித் சிங்கை அதிபர் சர்தாரி மன்னித்து விடுதலை செய்வதாக செய்திகள் வெளியாகின. இதனால் சரப்ஜித் சிங் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டு உற்றார், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழந்தனர். ஆனால் சற்று நேரத்தில் சரப்ஜித் சிங் அல்ல, சுர்ஜித் சிங்கைத்தான் விடுதலை செய்கிறோம். தவறாக சரப்ஜித் சிங் என்று அறிவித்துவிட்டோம் என்று பாகிஸ்தான் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதன் பிறகு சுர்ஜித் சிங் நேற்று காலை லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த சுர்ஜித் சிங்கின் இடது கையில் கைவிலங்கு மாட்டப்பட்டு அதன் சங்கிலி போலீஸ்காரர் ஒருவரின் பெல்ட்டில் இணைக்கப்பட்டிருந்தது. அவர் வாகா எல்லை வரை கைவிலங்கோடு தான் அழைத்து வரப்பட்டார். எல்லை வந்த பிறகு கைவிலங்கை கழற்றிவிட்டு அவர் அங்கிருந்த இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்காக காத்திருந்த அவரது உறவினர்கள் அவரைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். அவரது காலில் விழுந்து ஆசி வாங்கியும், அவருக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்