ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 17 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

ஹைதராபாத், ஜூலை.1 - ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 17க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொழிற்சாலையின் உள்ளே சிக்கி உள்ள 15 க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நாகர்ஜூனா ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று காலையில் பலத்த சத்தத்துடன் கூடிய வெடி சத்தம் ஏற்பட்டது. அதன்பிறகு சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ தொடர்ந்து எரிந்த நிலையில் 5 வது மாடியில் இருந்த ரசாயன கலவை சாதனங்கள் வெடித்து சிதறின. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈ்டுபட்டு வருகின்றனர்.

பின்னர் தொழிற்சாலையில் பணியில் இருந்த 17 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலையின் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிற்சாலையில் இருந்த ரசாயன பொருட்கள் தீயில் எரிந்ததால், தொழிற்சாலையை சுற்றிலும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

இது குறித்து மாநில போலீஸ் அதிகாரி கோபால் ராவ் கூறியதாவது,

சம்பவம் நடந்த போது தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். இதில் சிலர் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 15க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலைக்குள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. இச்சம்பவத்தில் இதுவரை யாரும் இறந்ததாக தகவல் இல்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: