முக்கிய செய்திகள்

மதுரையில் வேட்பாட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Srivilliputtur

 

மதுரை,ஏப்.1- மதுரையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்கும்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக ஆட்சியின் அவலங்களையும், ஊழல்களையும் மக்களிடம் கூறி ஓட்டு கேட்டு வருகிறார்கள்.   தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்தவுடன் அதிமுக வேட்பாளர்கள் மின்னல் வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ தொகுதியின் முக்கால் வாசி பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து விட்டார். முதியவர்களின் கால்களில் விழுந்து ஓட்டு கேட்பது வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அங்கு நிற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பார்த்து உங்களுக்கு லேப்டாப் வேண்டுமா, வேண்டாமா, உங்கள் வீட்டில் எப்போதும் மின்சாரம் இருக்க வேண்டுமா,வேண்டாமா என்று கேட்டு வேண்டுமானால் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். உங்கள்வீட்டில் உள்ளவர்களையும் போட்டு போட சொல்லுங்கள் என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருடன் முன்னாள் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன்சென்று வருகிறார்கள்.

    இதே போல் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தொகுதி முழுவதும் பம்பரமாக சுற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தான் ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் தான் செய்துள்ள சாதனைகளை சொல்லி, இதே போல் எனக்கு ஓட்டு போட்டால் வடக்கு  தொகுதிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்வேன்  என்று வாக்காளர்களுக்கு உறுதி அளித்து வாக்குசேகரித்து வருகிறார். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் திரண்டு வந்து எங்கள் ஓட்டு இரட்டை இலைக்குத்தான் என்று கூறுகிறார்கள்.  நேற்று காலை மதுரை கோரிப்பாளையம்  பகுதியில் வீதி,வீதியாக சென்று வாக்காளர்களே சந்தித்து வாக்கு கேட்டார். அப்போது பள்ளிவாசல் தெருவில்  உள்ள முஸ்லிம் மக்கள் இரட்டை விரல்களை காட்டி ஆதரவு தெரிவித்தனர். இவருடன் எம்ஜிஆர் இளைஞரணி மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட  அதிமுகவினரும்,கூட்டணி கட்சியினரும் சென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

   மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழரசன் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவர் கிராம மக்களிடையே திமுகவின் ஊழல் குறித்தும், விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, ரவுடிகள் அட்டகாசம் குறித்து எடுத்துச்சொல்வதை வாக்காளர்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள். மேலும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் செய்யக்கூடிய திட்டங்கள்,  ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமானவைகளை எடுத்துக்கூறி ஓட்டு கேட்டு வருகிறார். இவருக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.  நேற்று கருப்பாயூரணி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட வேட்பாளர் தமிழரசனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் அந்த வழியாக வந்த பஸ்களில் ஏறி பயணிகளிடமும் வாக்கு சேகரித்தார்.

  இதே போல் மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, தெற்கு தொகுதி மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் இரா.அண்ணாதுரை, மத்திய தொகுதி தேமுதிக வேட்பாளர் சுந்தர்ராஜன், திருப்பரங்குன்றம் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ.கே.ராஜா ஆகியோரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தந்த தொகுதி வேட்பாளர்களுடன்  கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு வந்து தேர்தல் வேலை பார்ப்பதுடன் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: