முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தியின் இந்திய குடியுரிமையே தவறானது

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

டெல்லி,ஜூலை.- 2 - சோனியா காந்திக்குப் பிரதமர் பதவி கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு இதுவரை சரியான தகவல் இல்லை. அவரது குடியுரிமைதான் பிரச்சினை என்பது மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் என்ன சட்டச் சிக்கல் இருந்தது என்பதை சுப்பிரமணியம் சாமி விளக்கமளித்துள்ளார். முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பிடித்து, அடுத்த பிரதமர் சோனியாதான் என்று அனைவரும் பேசி வந்த நிலையில்தான் சோனியா காந்தியின் குடியுரிமை, அவரது பிறப்பு குறித்து சர்ச்சைகள் எழுந்தன. குடியரசுத் தலைவராக அப்போது இருந்த அப்துல் கலாமுக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகளிடமிருந்து அடுத்தடுத்து வந்த புகார்களில் சோனியா பிரதமராகக் கூடாது என்று கோரி வந்தனர்.

இந்த நிலையில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியாமி சாமியை அழைத்த கலாம் அவரிடம், சோனியா காந்தியை பிரதமராக்குவதில் அப்படி என்னதான் சட்டச் சிக்கல் உள்ளது என்று பல்வேறு சட்ட நிபுணர்களை கொண்டு விளக்கத்தைக் கேட்டுள்ளார். அப்போது விளக்கம் அளித்த சாமி, சோனியா காந்தியின் இந்தியக் குடியுரிமையே முதலில் தவறானது. அவர் பதிவு பெற்ற குடியுரிமையைத்தான் வைத்துள்ளார். அதுவும் கூட தற்போது செல்லாது. சட்டப்படி தற்போது அவர் இத்தாலி குடியுரிமையில்தான் உள்ளார். காரணம், இந்திய சட்டப்படி இந்தியர் ஒருவர், இந்தியாவில் மட்டுமே குடியுரிமை பெற்றிருக்க முடியும். ஆனால் சோனியா தனது இத்தாலி நாட்டுக் குடியுரிமையை கைவிடாமல் வைத்திருக்கிறார். எனவே அவரது இந்தியக் குடியுரிமையே சட்டப்படி தவறாகும் என்று கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக விரிவான முறையில் சட்ட ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னர்தான் கலாம் தீர்க்கமான, திட்டவட்டமான முடிவை எடுத்தார் என்றும் சாமி கூறியுள்ளார் . கலாம் 2வது முறையாக குடியரசுத் தலைவராக முடியாமல் போனது குறித்து தான் வருந்தவில்லை என்றும், அவர் மீண்டும் குடியரசுத் தலைவராக வந்தால் மிகச் சிறந்த குடியரசுத் தலைவரை மீண்டும் நாடு காணும் என்றும் சாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்