முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தாவிடம் ஆதரவு கேட்டு பிரணாப் முகர்ஜி கெஞ்சல்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஜுலை - 3 - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியை பிரணாப் முகர்ஜி கெஞ்சி வருகிறார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப்  முகர்ஜி போட்டியிடுகிறார். இவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும் பாரதிய ஜனதா தலைமமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் இவருக்கு ஆதரவு அளித்துள்ளன. ஆனால் பாரதிய ஜனதா உள்ளிட்ட சில தே.ஜ. கூட்டணி கட்சிகள் பி.ஏ. சங்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. பிரணாப்பிற்கு இடது கம்யூனிஸ்ட்டு, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.  இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி தனக்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்காத அரசியல் கட்சிகள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தனக்கு ஆதரவு அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் கட்சி ஒரு மிகப்பெரிய பழமையான கட்சி. 125 ஆண்டுகால பழமைவாய்ந்த காங்கிரஸ் கட்சியின் தகுதிக்கும் திறமைக்கும் பஞ்சமே இல்லை என்றும் அவர் கூறினார். பெங்களூரில் பிரணாப் முகர்ஜிக்கு மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு இவர் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டினார். மேலும் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான தேவேகவுடாவையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்டினார். அப்போது மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்