முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேது கால்வாய் திட்டம்: மாற்றுப் பாதை சாத்தியமில்லை

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. - 4 - சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று சுற்றுச்சூழல் வல்லுனர் ஆர்.கே. பச்சேரி குழு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே. பச்சேரி தலைமையில் நிபுணர் குழுவை சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் மத்திய அரசு கடந்த 2008 ம் ஆண்டு நியமித்தது. அந்த குழு கடந்த மூன்றரை ஆண்டுகளாக திட்டம் நிறைவேற்றப்படும் பகுதியில் கடலியல், புவியியல், சுற்றுச் சூழலியல், பேரிடர் பாதிப்புகளுக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்தது. ராமர் பாலம் இருப்பதாக கூறப்படும் வழிக்கு மாற்றாக தனுஷ்கோடி வழியாக திட்டத்தை செயல்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் பற்றி பச்சேரி குழு ஆய்வு செய்தது.  ஆய்வுகளின் அடிப்படையில் மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அவ்வாறு செய்வது கடலியல் ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பச்சேரி குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாக். ஜலசந்தியையும், தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது சேது கால்வாய் திட்டம்.  167 கி.மீ. தூரமும், கடலில் 12 மீட்டர் ஆழமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட இந்த திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2005 ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் 6 வது தடத்தில் ராமர் பாலம் இருப்பதாக சில இந்து அமைப்புகள் கூறின. இதையடுத்து இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமியும், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அது மட்டுமின்றி, சேது கால்வாய் திட்டம் அமல்படுத்தப்படும் பகுதியை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தனியாக வழக்கும் தொடுத்தனர்.  இதையடுத்து 6 வது தடத்துக்கு பதில் மாற்று வழியில் சேது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என்பதை ஆராயும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து மத்திய அரசால் சுற்றுச்சூழல் நிபுணர் பச்சேரி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இப்போது அந்த குழு தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எச்.எல். தட்டு, சி.கே. பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சேது சமுத்திர திட்டம் குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செயப்பட்டுள்ள பச்சேரி அறிக்கையில், மாற்று வழித்தடத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை என கூறப்பட்டுள்ளது பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பச்சேரி அறிக்கை குறித்து மத்திய அமைச்சரவை இன்னும் பரிசீலிக்கவில்லை. அமைச்சரவை விவாதித்த பிறகே அரசின் நிலையை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த முடியும் என்றார்.  இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பச்சேரி அறிக்கை குறித்தும் அதன் தொடர்ச்சியாக சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்