முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப், சங்மா வேட்பு மனுக்கள்ஏற்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. ஜூலை. - 4 - ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பி.ஏ.சங்மாவின் வேட்பு மனுவும், ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பிற மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் பிரணாப் முகர்ஜி, சங்மாவின் நேரடி போட்டி உறுதியாகி விட்டது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற 24 ம் தேதியுடன் முடிவடைவதை முன்னிட்டு  நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். இவர் நாடு முழுவதும் சென்று தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். சங்மா கூறுவதைப் போல எந்த அதிசயமும் நிகழாது என்றும், தான் வெற்றி பெறப் போவது உறுதி என்றும் பிரணாப் முகர்ஜி கூறி வருகிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க, பிஜூ ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. ஆதரவு பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார். இவரும் நாடு முழுவதும் சென்று தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். மனசாட்சிப்படி எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் ஓட்டுப் போட வேண்டும் என்று பி.ஏ. சங்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி மற்றும் பி. ஏ. சங்மா ஆகியோர் கடந்த  மாதம் 28 ம் தேதி  தங்களது வேட்பு மனுக்களை ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும் ராஜ்ய சபை செயலாளருமான அக்னி ஹோத்திரியிடம்  தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் கடந்த 30 ம் தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.  இதில் பி. ஏ. சங்மாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தேர்தல் அதிகாரி அக்னி ஹோத்திரி தெரிவித்தார். சங்மா தாக்கல் செய்துள்ள வேட்புமனு மற்றும் அது தொடர்பான  ஆவணங்கள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு  அவை சரியானவை என்று பரிசீலிக்கப்பட்டு  ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சங்மாவின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்கள் மற்றும் வழிமொழிந்தவர்கள் பட்டியலில் சில குளறுபடிகள் இருப்பதாக ஆட்சேபனைகள் எழுப்ப்பட்டிருந்தன. ஆனால் அந்த ஆட்சேபனைகளை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். இதே போல பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவரது மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சில காரணங்களை காட்டி பி.ஏ. சங்மா வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. மற்ற மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் பிரணாப் முகர்ஜி, சங்மாவின் நேரடி போட்டி உறுதியாகி விட்டது. வரும் 19 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்