முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணிக்கு 68 இடங்கள் - ஹெட்லைன்ஸ் டுடே

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.2 - தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைத்து உள்ள மாபெரும் கூட்டணிக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 164 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த தேர்தல் மூலம் தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் இந்தியா டுடே, ஹெட்லைன்ஸ் டுடே, ஆஜ்தக் மற்றும் ஓ.ஆர்.ஜி. நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும் தி.மு.க. கூட்டணிக்கு இத்தேர்தலில் 68 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் மேற்கண்ட கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்த பிறகு கட்சித் தலைவர்கள் பிரச்சாரக் களத்தில் சுறுசுறுப்பாக இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவு குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கருத்துக் கணிப்புகள் எல்லாமே அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளன. 

சமீபத்தில் கோவையில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு அ.தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது. அதற்குப் பிறகு ஆனந்த விகடன் இதழ் தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டது. இந்த கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க. கூட்டணி 44.26 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தி.மு.க. கூட்டணி 34.60 சதவீத வாக்குகளை பெறும் என்றும் மற்ற கட்சிகள் 21.14 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களை சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து எடுக்கப்பட்ட சர்வே இது என்று அந்த இதழ் குறிப்பிட்டிருந்தது. 

மேலும் அ.தி.மு.க. கூட்டணியே பலமான கூட்டணி என்றும் தி.மு.க. கூட்டணி பலவீனமான கூட்டணி என்றும் ஆனந்த விகடன் இதழ் கருத்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் பல கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. 2011 சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுமே வெற்றி பெறுவார்கள் என்று பல கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதே போல அசாம் மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் என்றும் சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

இந்தியா டுடே, ஹெட்லைன்ஸ் டுடே, ஆஜ்தக் தொலைக்காட்சி மற்றும் ஓ.ஆர்.ஜி. நிறுவனமும் இணைந்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. இந்த கருத்துக் கணிப்பும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கே ஆதரவாக உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான மாபெரும் கூட்டணிக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 164 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இத்தேர்தல் மூலம் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 

இ.கம்யூனிஸ்டு, வ. கம்யூனிஸ்டு, தே.மு.தி.க, போன்ற பல கட்சிகளை உள்ளடக்கிய அ.தி.மு.க. கூட்டணிக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. அது மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணிக்கு மொத்தமே 68 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. 2006 ம் ஆண்டு தேர்தல் நடந்த போது அ.தி.மு.க. 69 இடங்களை கைப்பற்றியது. ஆனால் தி.மு.க. கூட்டணி 163 இடங்களை அப்போது கைப்பற்றியது. ஆனால் இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டு பார்த்தால் எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. 

அ.தி.மு.க. கூட்டணிக்கு 164 இடங்களும், தி.மு.க. கூட்டணிக்கு 68 இடங்களும்தான் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. காரணம், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு போன்றவற்றால் தி.மு.க.வின் செல்வாக்கு அடியோடு சரிந்து விட்டது என்பதுதான் உண்மை. ஸ்பெக்ட்ரம் ஊழலை அ.தி.மு.க மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைத்து வருகிறது. இந்த கொள்ளையர்களை வெளியேற்றுங்கள் என்று நேற்று கூட ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். 

இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட போது அதை தி.மு.க. அரசு சரியான முறையில் கையாளவில்லை. இதனாலும் மக்கள் அந்த அரசு மீது வெறுத்துப் போயிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, வேலையில்லாத் திண்டாட்டம், குடிநீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளும் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தி.மு.க. அரசு சரியான தீர்வு காணவில்லை. அதனால் ஜெயலலிதாவே அடுத்த முதல்வராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். 36.1 சதவீத மக்கள் ஜெயலலிதாவை விரும்புகிறார்கள். ஆனால் கருணாநிதி முதல்வராக வேண்டும் என்று 34.1 சதவீத மக்களே விருப்பம் தெரிவித்துள்ளனர். 

தன் மகன் ஸ்டாலினை முதல்வராக்க கருணாநிதி விரும்புகிறார். ஆனால் 3.5 சதவீத வாக்காளர்களே ஸ்டாலினை விரும்புகிறார்கள். ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. இந்த தேர்தல் மூலம் தே.மு.தி.க.வுக்கு 11.3 சதவீத வாக்கு கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஒட்டுமொத்தமாக சொன்னால் ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு மூலம் அ.தி.மு.க. கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. 

அ.தி.மு.க. கூட்டணிக்கு 50 சதவீத வாக்குகளும், தி.மு.க. கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்க நிலவரத்தையும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளும், 182 சட்டப் பேரவை தொகுதிகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. 

ஆனால் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், இந்த கூட்டணி 101 தொகுதியில் வெற்றி பெறும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 32 சதவீத வாக்குகளும், 46 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் கண பரிஷத் கட்சிக்கு 25 சதவீத வாக்குகளும், 38 தொகுதிகளும்தான் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு 12 சதவீத வாக்குகளும், 15 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. 

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 48 சதவீத வாக்குகளும், 96 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 40 சதவீத வாக்குகளும், 41 தொகுதிகளும்தான் கிடைக்கும் என்றும் மற்றர்களுக்கு 12 சதவீத வாக்குகளும், 3 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருவதும், தி.மு.க. கூட்டணி வீட்டுக்கு செல்வதும் இந்த கருத்துக் கணிப்பு மூலம் உறுதியாகி விட்டது. மேலும் நேற்று சென்னையில் வெளியான லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக் கணிப்புகளும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்