முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் - குமுதம் ரிப்போர்ட்டர்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.2 - அ.தி.மு.க தான் ஆட்சி அமைக்கும் என்று குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை இதழின்சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது, யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிய 60 ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் பணமும், இலவசங்களும் ஆட்சியை தக்கவைக்கவோ, ஆட்சியை பிடிக்கவோ உதவப்போவதில்லை என்றும், இலவச திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை, ஆளுங்கட்சியினராலும் உள்ளாட்சி பிரதிநிதிகளாலும் அவை கொண்டு செல்லப்பட்டன என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வும் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு தி.மு.க. மீது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது, அவர்களும் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என தேர்தல் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

கருத்து கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஜெயலலிதா முதல்வராக வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். யார் முதல்வராக வரவேண்டும் என கேட்ட கேள்விக்கு ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என 60 சதவீதம் பேரும், கருணாநிதி முதல்வராக வேண்டும் என 24 சதவீதம் பேரும், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என 16 சதவீத பேரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த சர்வேயின்போது, எந்த கூட்டணிக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என கேட்டபோது  அ.தி.மு.க.வுக்கு 58 சதவீதம் பேரும், தி.மு.க.வுக்கு 33 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, அ.தி.மு.க. அணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்பது தீர்க்கமாக தெரிகிறது.இவ்வாறு குமுதம் ரிப்போர்ட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்