சென்னையில் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பு

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Chennai

 

சென்னை, ஏப்.2 - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று (ஏப்.1) மதியம் சென்னையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வழியெங்கும் அவருக்கு பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., சி.பி.எம்., சி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி பார்வேர் பிளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உட்பட கூட்டணிக் கட்சிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 234 இடங்களில் போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். 

கடந்த மாதம் 4-ந் ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரச்சாரம் தொடங்கிய ஜெயலலிதா, நேற்று முன்தினம் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்தார். சென்னையில் நேற்று முதற்கட்டமாக அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று மதியம் ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக நுங்கம்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா புஷ்பாநகரில் பொதுமக்களிடையே பேசினார். 

பின்பு நெல்சன் மாணிக்கம் சாலை, சூளைமேடு, மேத்தாநகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, எம்.எம்.டி.ஏ. வழியாக வாக்கு சேகரித்த ஜெயலலிதா சூளைமேடு எம்.எம்.டி.ஏ. மார்க்கெட்டில் அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல இந்திராவிற்காக வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவருக்கு மகளிர் அணியினர், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். பிறகு கோயம்பேடு, திருமங்கலம், நூறடி சாலை வழியாக அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வேதச்சாலத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன் பிறகு பாடி வழியாக வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். வில்லிவாக்கம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் கொடிகளையேந்தி ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்பு கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக அயனாவரம் பகுதியில்  வாக்கு சேகரித்த ஜெயலலிதா அயனாவரம் பஸ்நிலையம் அருகே கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

அதன்பிறகு பொடிக்கடை நம்மாழ்வார்பேட்டை வழியாக ஓட்டேரி பாலம் அருகே ஜெயலலிதா வந்தபோது அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

கையில் இரட்டை இலை சின்னத்தையும், கட்சிக்கொடியையும் உற்சாகமாக காண்பித்தனர். கூட்டணி கட்சியினரும் கொடியுடன் வந்து ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இரட்டை இலைக்கே எங்கள் வாக்கு, அ.தி.மு.க. அமோக வெற்றிபெரும் என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர்.

அதன் பிறகு ஓட்டேரி பிரிட்ஜ்கேஸ் சாலை வழியாக ஓட்டேரி மேகலா தியேட்டர் அருகே எழும்பூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு போயஸ் இல்லத்திற்கு திரும்பினார். 

இந்த பிரச்சாரத்தில் தலைமை நிலையச்செயலாளர் செங்கோட்டையன், அமைப்பு செயலாளர் மு.தம்பித்துரை, வடசென்னை மாவட்ட செயலாளரும், ராயபுரம் தொகுதி வேட்பாளருமான டி.ஜெயக்குமார், வேட்பாளர்கள் ஆயிரம் விளக்கு-வளர்மதி, அண்ணாநகர்-கோகுல இந்திரா, தி.நகர்-கலைராஜன், துரைமுகம்-பழக்கருப்பையா, சேப்பாக்கம்-அமிமுன்அன்சாரி, மைலாப்பூர்-ராஜலட்சுமி, திரு.வி.க.நகர்-நீலகண்டன், ஆர்.கே.நகர் வெற்றிவேல், திருவொற்றியூர் -குப்பன், வில்லிவாக்கம்-ஜே.சி.டி. பிரபாகரன், கொளத்தூர்-சைதை துரைச்சாமி, பெரம்பூர்-சி.பி.எம். வேட்பாளர் ஆ.செளந்தர்ராஜன் எழும்பூர் தொகுதி தே.மு.தி.க. கு.நல்லதம்பி, தென்சென்னை மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி வேட்பாளருமான செந்தமிழன், திருவள்ளூர்-ரமணா, மாதவரம்-மூர்த்தி, பொன்னேரி -ராஜா, அம்பத்தூர் - வேதாச்சலம், பூந்தமல்லி-மணிமாறன், திருத்தணி-தே.மு.தி.க.-சுப்பிரமணியன், கும்மிடிப்பூண்டி-சேகர், மதுரவாயல்- சிபிஎம் வேட்பாளர் பீம்ராவ்  உட்பட ஏராளமான முன்னணி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா பிரச்சாரம் ஆரம்பித்த நுங்கம்பாக்கம் சாலையில் இருந்து பிரச்சாரத்தை முடித்த எழும்பூர் தொகுதி பிரிக்கிளின் சாலை வரை வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள், பெண்கள், இளம் தலைமுறையினர் வழிநெடுக நின்று ஜெயலலிதாவை பார்த்து இரட்டை விரலை காட்டி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.  அனைத்து இடங்களிலும் மகளிர் அணியினர், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை அமைப்பினர், கூட்டணி கட்சி தொண்டர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரச்சார பகுதியில் பொதுமக்களிடையே இந்த முறை கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டே தீரவேண்டும் என்று பேசிக்கொண்டனர். 

நேற்று காலை வெளியான லயோலா கல்லூரி  கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற செய்திபற்றி  பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாகமாக பேசிக்கொண்டனர். ஓட்டேரி பகுதியில் அப்பளத்தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். 

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.2 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன், பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவியுடன் 4 கிராம் தங்கம், மாணவர்களுக்கு லேப் டாப், விலைவாசி உயர்வை தனது அரசு வந்தால் கட்டுப்படுத்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்து சென்னை மாநகரை ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பேன் என்று ஜெயலலிதா பேசியது பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பையும், கரகோசத்தையும் பெற்றுத்தந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: