உலகக் கோப்பை இறுதி ஆட்டம் - வரலாறு காணாத பாதுகாப்பு

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      இந்தியா
Wankadae

 

மும்பை,ஏப்.2 - மும்பையில் இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மும்பை நகரமே பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வந்து விட்டது.  இந்த ஆட்டத்தைக் காண ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோர் வருகின்றனர். மேலும் ஏராளமான முக்கிய தலைவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 32 ஆயிரம் பேர் அமர்ந்து ஆட்டத்தை காணக் கூடிய இந்த மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

மும்பை போலீஸ் தேசிய பாதுகாப்பு படை, மகராஷ்டிரா எலைட் போர்ஸ், ஒன் அதிரடிப்படை, மாநில ரிசர்வ் போலீஸ் படை என பல்வேறு பாதுகாப்பு படையினர் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வான்கடே மைதானம் அமைந்துள்ள பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்திற்கு உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் 180 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. 

மைதானத்தில் இருந்து 2 கி.மீ தொலைவுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். போட்டியை காண வரும் ரசிகர்கள் மைதானத்திற்குள் உணவுப் பொருட்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் குடிநீர் பாட்டில்கள் எடுத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானம் இருக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களுக்கு பதிலாக அரசு பஸ்களை பயன்படுத்துமாறு ரசிகர்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போட்டியை காண வருபவர்களுக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: