முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித்தர இந்தியா ஒப்பந்தம்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூலை. - 16 - இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக ரூ. 1,512 கோடி செலவில் 43 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.  இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையில் இறுதிக் கட்ட போர் கடந்த 2009 ல் நடைபெற்றது. இப்போரினால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாக மாறினர். அவர்களை தங்களின் சொந்த பகுதிகளில் மறுகுடியமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.  இந்நிலையில் தமிழர்களுக்கு சுமார் ரூ. 1,512 கோடி செலவில் 43 ஆயிரம் வீடுகளை கட்டி தருவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஐ.நா. அமைப்பான ஹேபிடட் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம், இலங்கையின் செஞ்சிலுவை சங்கம், இலங்கை தேசிய வளர்ச்சி ஏஜன்சி ஆகியவையும் இணைந்து கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்டித் தரப்படுவதற்கு பதிலாக அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்படும். இத்திட்ட அமலாக்கத்துக்கான அமைப்புகள் தீவிர பரிசீலனைக்குப் பின்பே தேர்வு செய்யப்பட்டதாக இந்திய தூதர் அசோக் காந்தாவும் இலங்கை பொருளாதார வளர்ச்சி துறை அமைச்சர் பாசில் ராஜபட்சேவிடம் தெரிவித்தனர்.  அசோக் காந்தா கூறுகையில், இத்திட்டத்திற்கான பயனாளிகளை அடையாளம் காணும் பணியில் இலங்கை அரசும், மற்ற நான்கு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. இத்திட்டத்தில் சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக பயனாளிகளை அடையாளம் காணும் பணியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடு கட்டிக் கொள்வதற்கான பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் இந்திய தூதரகத்தால் போடப்படும். பணம் படிப்படியாக வழங்கப்படும் என்றார். 2 லட்சத்து 80 ஆயிரம் அகதிகளுக்கு வீட்டு வசதி அவசர தேவை என்பதால் இந்த திட்டத்தை வெகுவாக நிறைவேற்றுமாறு செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை அமைச்சர் பாசில் ராஜபட்ச வலியுறுத்தி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்