முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் தமிழகமீனவர் சுட்டுக்கொலை வருத்தம் தெரிவித்தார் அமெரிக்கதூதர்

புதன்கிழமை, 18 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

துபாய், ஜூலை. - 18 - துபாயில் அமெரிக்க கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு தமிழக மீனவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு முகாமிட்டுள்ளது. அந்த படைக்கு எரிபொருள் விநியோகத்துக்காக ஹயுஎஸ்என்எஸ் ரப்பாஹன்னோக்ா என்ற அமெரிக்க எரிபொருள் கப்பல் துபாய் வழியாக சென்று கொண்டிருந்தது. துபாயின் ஜபேல் அலி துறைமுகம் அருகே அக்கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அந்த கப்பலை நோக்கி 30 அடி நீளமுள்ள ஒரு சிறிய படகு விரைந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் படகு தீவிரவாதிகளின் படகாக இருக்குமோ என்று அச்சப்பட்ட அமெரிக்க மாலுமிகள் படகின் திசையை மாற்றுமாறு எச்சரித்திருக்கின்றனர். ஆனால் படகில் சென்று கொண்டிருந்த மீனவர்களுக்கு அது தெரியவில்லை. இதனால் திடீரென அமெரிக்க படகில் இருந்தவர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். ஆனாலும் மீனவர் படகு தங்களைத்தான் தாக்க வருகிறது என்று கருதி சராமரியாக படகை நோக்கி சுடத் தொடங்கினர். இதில் படகில் இருந்த ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அப்படகு ஜபேல் அலி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. படகில் இருந்தவர்கள் ராமேஸ்வரம் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் துபாய் நிறுவனத்துக்காக கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானவர் பெயர் சேகர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் தோப்புவலசை களிமண்குண்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே முள்ளிமுனையைச் சேர்ந்த முத்துகண்ணன், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தவர்கள். இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறு துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக துபாயில் உள்ள தூதரை தொடர்பு கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பலியான மீனவர் சேகரின் உடலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவும் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க கடற்படையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாயில் அமெரிக்கக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் சேகர் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாயை அமெரிக்க தூதர் நான்சி பெளல் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது துபாய் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அபு தாபியில் உள்ள தூதரகமும் ஜபேல் அலியில் உள்ள தற்காலிக தூதரும் முழு ஒத்துழைப்பும் வழங்குவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் மூன்று தமிழக மீனவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஐக்கிய அரபு எமிரேட் அரசிடம் இந்திய தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கேரளாவின் கொல்லம் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இத்தாலிய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இத்தாலிய கடற்படையினர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இச்சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு அமெரிக்க கடற்படையினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய இந்திய தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்