முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30 தொகுதிகளிலும் பா.ம.க. டெபாசிட் இழக்கும் - எல்.கே.சுதீஷ்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

அரக்கோணம், ஏப்.2 - அரக்கோணம் அருகே நெமிலியில் நடந்த தே.மு.தி.க. பிரசாரத்தில் பேசிய தே.மு.தி.க. மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தமிழகத்தில் 30 தொகுதிகளில் பா.ம.க. டெபாசிட் இழக்கும் என்றார். வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் (தே.மு.தி.க.) பி.ஆர். மனோகரை ஆதரித்து தே.மு.தி.க. மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் வாக்கு சேகரிக்க நேற்றுமுன்தினம் இரவு வந்தார். அப்போது அவர் பேசியதாவது-

வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவது உறுதி. இந்த மாவட்ட பொறுப்பாளரான நான் அனைத்து தொகுதிகளிலும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அப்போது பொதுமக்களிடையே ஒரு மாற்றத்தினையும் நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு பெருமளவிலான ஆதரவையும் கண்டேன். பா.ம.க. வேட்பாளர்கள் ரூ.5 கோடி கொடுத்து களத்தில் இறங்கி உள்ளனர். ஆனால் ஏழைகளுக்கே ஓட்டு தந்து அழகு பார்க்கும் கட்சியாக தே.மு.தி.க. பிரகாசிக்கிறது. நமது கூட்டணி வெற்றி கூட்டணி. தே.மு.தி.க. - அ.தி.மு.க. வெற்றி கூட்டணியாகும். பிளவுபடும் என மனப்பால் குடித்த கருணாநிதிக்கு அரை மணி நேர மகிழ்ச்சி அடைய கால தாமதம் செய்து வேட்பாளர் பட்டியலை நாங்கள் திட்டமிட்டே வெளியிட்டோம்.

இரு தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றவில்லையே என்று நம் கூட்டணி தலைவர்களை பார்த்து எதிர் கட்சியினர் கேட்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும். குறைவான கால அவகாசமே உள்ளதால் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலையே இருக்கிறது. இதனால் விஜயகாந்தும் ஜெயலலிதாவும் கூட்டணி கட்சி தலைவர்களும் தனித்தனியாக அவரவர் சம்பந்தப் பட்ட தொகுதிகளிலே பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது. இது எதிர் கட்சியினருக்கு தெரியவில்லை. 

வருகிற தேர்தலிலே பா.ம.க. 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் ஒரு தொகுதியிலும் பா.ம.க. டெபாசிட் தொகை கூட பெற முடியாது.

இவ்வாறு எல்.கே.சுதீஷ் பேசினார்.

பிரசாரத்தில் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் பூட்டுத்தாக்கு நித்யா, உதயகுமார், குட்டிபாபு, ஜானகிராமன், அ.தி.மு.க. சார்பில் சி.கோபால், வில்வநாதன், கார்டன் ராஜா, செல்வம், வசந்த் ஜெயின், அருள், மாதவன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்