உத்தர பிரதேச சாலை விபத்தில் 5 பக்தர்கள் உடல் நசுங்கி பலி

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா

 

கவுசாம்பிக். பிப்.21-உத்தர பிரதேச மாநிலத்தில் கவுசாம்பிக் என்ற நகருக்கு அருகே நடந்த சாலை விபத்து ஒன்றில் 5 பக்தர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில்  ரவிதாஸ் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் சென்றனர். இவர்கள்  தங்கள் வழிபாட்டை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 22 வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்போது கவுசாம்பி நகருக்கு அருகே நிலக்கரி பாரத்துடன் நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது பக்தர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் அதே இடத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.  7 பேர் படுகாயத்துடன்  அலகாபாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் பலியானார். 

இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. காயம் அடைந்த  மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: