முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க முறைகேடுகளை விசாரிக்கும் கமிஷனின் பதவிக்காலம் நீட்டிப்பு

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி. ஜூலை. - 21 - சுரங்க முறைகேடுகள் குறித்து விசாரணையை நடத்தி வரும் நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான விசாரணை கமிஷனின் பதவிக்காலத்தை  மத்திய அமைச்சரவை நீட்டித்துள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமான சுரங்க நடவடிக்கைகள் நடப்பதாக மத்திய  அரசுக்கு புகார்கள் வந்தன.  இதில் பல கோடி ரூபாய்க்கு ஊழல்கள் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.  இது குறித்து விசாரணை நடத்த நீதிபதி எம்.பி. ஷா  தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை மத்திய அரசு அமைத்தது. சுரங்க நடவடிக்கைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கும்படி இந்த கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது.  இந்த கமிஷன்  கடந்த ஆண்டு  நவம்பர் 22 ம் தேதி அமைக்கப்பட்டது. அகமதாபாத்தை இருப்பிடமாக கொண்டு செயல்படும் இந்த கமிஷன்  தனது அறிக்கையை இம்மாதம்  16 ம் தேதி  மத்திய  அரசிடம் சமர்ப்பித்து இருக்க வேண்டும். ஆனால் பல மாநிலங்களில் சுரங்க நடவடிக்கைகள் குறித்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கப்பெறாததால்  தனது பதவிக்காலத்தை மேலும்  நீட்டித்து தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஷா கமிஷன்  வேண்டுகோள் விடுத்தது.  இந்த வேண்டுகோளை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான  மத்திய அமைச்சரவை நேற்று ஆலோசித்து  இந்த கமிஷனின் பதவிக்காலத்தை  அடுத்த ஆண்டு ( 2013 ) ஜூலை 16 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நீட்டிப்பின் மூலம் இந்த விசாரணைக்கமிஷனுக்கு கூடுதலாக ஏற்படும் செலவுக்காக ரூ.  50 லட்சத்தை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்