முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைஜனாதிபதி தேர்தலில் ஹமீத்அன்சாரி - ஜஸ்வந்த்சிங் நேரடிபோட்டி

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. - 22 - அடுத்த மாதம் 7 ம் தேதி நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரிக்கும், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த்சிங்கிற்கும் இடையே நேரடி போட்டி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்ற போது மீதியுள்ள 29 பேரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதால் இவர்கள் இடையேயான போட்டி உறுதியாகி விட்டது.  ஜனாதிபதி தேர்தல் கடந்த 19 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக பிரணாப் முகர்ஜியும், அவரை எதிர்த்து பி.ஏ. சங்மாவும் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு முடிந்து விட்ட நிலையில் இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி பெறப் போவது யார் என்பது தெரிந்து விடும்.  இதனிடையே அடுத்த மாதம் 7 ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியே மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் போட்டியிடுகிறார். கடந்த 14 நாட்களாக வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 18 ம் தேதியன்று காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் மொத்தம் நான்கு விதமான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.  பின்னர் நேற்று முன்தினம் தே.ஜ. கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த்சிங் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் 3 விதமான வேட்பு மனுக்களை அப்போது தாக்கல் செய்தார். இவர் மனுத்தாக்கல் செய்த போது அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். இதற்கிடையில் நேற்று வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது ஹமீத் அன்சாரி, ஜஸ்வந்த்சிங் ஆகிய இருவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதியுள்ள 29 பேரின் வேட்பு மனுக்களும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதாக இத்தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியும், லோக்சபை பொதுச் செயலாளருமான டி.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.  மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு வேட்பாளரை முன்மொழிய 20 எம்.பி.க்கள் வேண்டும். அதே போல் வழிமொழியவும் 20 எம்.பி.க்கள் வேண்டும். ஆனால் பலருக்கு முன்மொழியவோ, வழிமொழியவோ எம்.பி.க்கள் கிடைக்கவில்லையாம். மேலும் டெபாசிட் தொகை கட்டவும் பலர் சிரமப்பட்டார்களாம். சுனிதா சவுத்ரி என்ற டெல்லிவாசி நான்கு விதமான வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.  ஆனால் இவருக்கு முன்மொழியவும், வழிமொழியவும் எம்.பி.க்கள் கிடைக்கவில்லை. இப்படி பல காரணங்களால் 29 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மொத்தம் 31 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் அன்சாரி, ஜஸ்வந்த்சிங் மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 23 ம் தேதியாகும். துணை ஜனாதிபதி தேர்தலில் மீதியுள்ள அனைவரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் அன்சாரி, ஜஸ்வந்த்சிங் இடையேயான நேரடி போட்டி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்த தேர்தல் அடுத்த மாதம் 7 ம் தேதி 14 வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடக்கிறது. மொத்தம் 790 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்