முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் செல்ல ஏற்பாடு - ஜெயலலிதா உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

கன்னியாகுமரி, ஏப்.3 - இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணம் செல்ல அரசு உதவி செய்வதுபோல் கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் செல்ல ஏற்பாடு செய்வேன் என்று ஜெயலலிதா உறுதி கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்றுமுன்தினம் சென்னையில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். அப்போது வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு பின் தற்போது கொள்ளையனே வெளியேறு போராட்டத்தை நடத்தி வருகிறேன் என்றார். சென்னை பிரசாரத்தை முடித்துவிட்டு நேற்று குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். கன்னியாகுமரியில் பிரசாரம் செய்தார். அப்போது ஜெயலலிதா கூறியதாவது:-

இந்த தேர்தல் வெறும்ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்கள் இந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. அரிசி கடத்தல், மணல் கொள்ளை, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் அமோகமாக நடந்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கி ஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.

தமிழக அரசின் கடன் தொகை ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளது கருணாநிதி குடும்பம். மக்கள் பணத்தை கோடி கோடியாக கருணாநிதி குடும்பம் சுரண்டிவிட்டது. காலாவதியான மருந்து விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படியெல்லாம் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மக்களின் அவலம், திண்டாட்டம் பெருகிவிட்டது. ஏழைமக்களின் நிலம் அடிமாட்டு விலைக்கு தி.மு.க கும்பல் வாங்கிவிட்டது. ரியல் எஸ்டேட் துறை கருணாநிதியின் குடும்பத்திடம் சிக்கித் தவிக்கிறது. திரைப்படத்துறை கருணாநிதியின் குடும்பத்துறையாக மாறிவிட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு அடியோடு இல்லை. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதிக்கு மக்கள் பிரச்சனையை தீர்க்க வக்கில்லை. அனைத்து நிலங்களும் கருணாநிதி குடும்பத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கருணாநிதி குடும்பத்தினர் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகிவிட்டது. மைனாரிட்டி தி.மு.க ஆட்சியால் தலைக்குனிவிற்கு தமிழகம் ஆளாகிவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து கருணாநிதி குடும்பத்தினரை விரட்டி அடிக்க வேண்டும்.

கருணாநிதிக்கு சொத்து குவிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆசிய பணக்காரர்களில் ஒருவராக வந்துவிட்ட பி ன் உலக பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கருணாநிதி இருக்கிறார். தமிழக மக்களே நீங்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்றபிரச்சனைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ரவுடிகளின் அட்டகாசத்தால் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகாலமாக ஒரு குடும்பம் வாழ்கிறது. ஆறு கோடி குடும்பங்கள் வாழ தமிழக மக்கள் எம்.ஜிஆரின் பொற்கால ஆட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் ரவுடிக் கும்பல் ஆட்சிதான் நடக்கிறது. ஒரு குடும்பம் வாழ ஏழு கோடி குடும்பங்கள் அவதிப்பட வேண்டுமா? ஏழு கோடி குடும்பங்கள் வளமாக எம்.ஜி.ஆரி ன் நல்லாட்சி மலர வேண்டும். கன்னியாகுமரியிலுள்ள பிரச்சனைகளை நான் அறிவேன். 

இஸ்லாமிய மக்களின் ஹஜ் பயணத்திற்கு அரசு உதவுவது போல் கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் செல்வதற்கு ஏற்பாடு செய்வேன். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பேன், மார்சல் நேசமணிக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். களியக்காவிளையில் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் சேர்க்கப் போராடிய சிதம்பரநாதனுக்கு சிலை வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக 1.20க்கு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். அவரை கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர் தளவாய் சுந்தரம், வேட்பாளர் பச்சைமால், கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர்மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், குமரி எஸ்,கோலப்பன், ஆர்.எஸ்.மணி ஆகியோர் வரவேற்றனர். கன்னியாகுமரி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு நாகர்கோயிலில் அ.தி.மு.க வேட்பாளர் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து பேசினார். 

அதன் பின்னர் குளச்சலில் நடைபெற்றபிரச்சாரக் கூட்டத்தில் குளச்சல் தொகுதி வேட்பாளர் லாரன்ஸ், பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் ஆஸ்டின், இலவங்கோடு கம்யூனிஸ்ட் வேட்பாளர் லீமா ரோஸ் ஆகியோரையும் ஜெயலலிதா ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்