முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரிநதிநீர் ஆணையத்தை உடனேகூட்ட சுப்ரீம் கோர்ட்டில் தமிழகஅரசு மனு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.- 23 - ஒப்பந்தப்படி தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பதால் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக மத்திய அரசு காவிரி நதிநீர் ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையம் காவிரி நதிநீரை கர்நாடகமும் தமிழகமும் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று கடந்த 5.2.2007-ல் தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டுக்கு ஒரு ஆண்டிற்கு 419 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்க வேண்டும். கர்நாடகம் 220 டி.எம்.சி.நீரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது காவிரி நடுவர்மன்றம் அளித்த தீர்ப்பாகும். ஆனால் கர்நாடகா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா அரசு வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே கர்நாடக அரசு தமிழகத்திற்கு போதிய தண்ணீரை திறந்து விடாததுடன் அதிகமாக நீரை பயன்படுத்தியது தெரியவந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதில் கர்நாடக அரசு கூடுதலாக காவிரியில் தண்ணீர் எடுப்பததை தடைசெய்து உத்தரவிடவேண்டும் என்று கோரியது. இதற்கு கர்நாடக அரசு ஆட்சேபம் தெரிவித்ததுடன் அந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் 19.4.2012-ல் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் காவிரி நடுவர்மன்ற தலைவராக இருந்த என்.பி.சிங் உடல்நல குறைவு காரணமாக அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆகவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளில் விரைவில் தீர்ப்பு கிடைக்க உடனடியாக காவிரி நடுவர் மன்றத்திற்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். பின்னர் 19.5.2012-ல் மீண்டும் ஒரு கடிதத்தை முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதினார். அதில் நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை ஆகவே காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாக கூட்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டவேண்டிய அவசியமில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, மழை குறைவான நாட்களில் காவிரி தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற சூத்திரத்தை வரையறுத்து 2002ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை இதுவரை அமுல் படுத்தப்படவில்லை. நதிநீர் ஆணையத்தின் உத்தரவு படியும் கர்நாடகா நடந்து கொள்ளவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாக கூட்டவும் உத்தரவிட வேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு கண்காணிப்பு குழுவின் பங்களிப்பு திட்டத்திற்கு அந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்