முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாயத்து தேர்தலில் தனித்தே போட்டி மம்தாபானர்ஜி ஆவேசபேச்சு

திங்கட்கிழமை, 23 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஜூலை.- 23 - மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் தனது  கட்சி தனித்து போட்டியிடும் என்றும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்றும் திரிணமுல்  காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி  கூறியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல்  காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு  ஆதரவு தர மாட்டேன் என்று கூறிய மம்தா பானர்ஜி பின்னர் ஆதரவு அளிப்பதாக  கூறியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்  திரிணமுல்  காங்கிரஸ் தொடர்ந்து  இருக்கிறது என்பதை  இதன் மூலம் மம்தா உறுதி செய்தார். இந்த நிலையில்  கொல்கத்தாவில் திரிணமுல்  காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தனது பலத்தை பறை சாற்றும் வகையில் இந்த பேரணிக்கு மம்தா ஏற்பாடு செய்திருந்தார். இந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி மத்தியில்  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்  தனது  கட்சி தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்றார். டெல்லியில் உள்ள கூட்டணி அப்படியே டெல்லியில் இருக்கிறது. எங்களது கட்சிக்கு காங்கிரஸ் கட்சி போதுமான மரியாதையை  கொடுத்துக்கொண்டிருக்கும் வரை இந்த  கூட்டணி தொடரும். ஆனால் மேற்கு வங்காளத்தில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து  தேர்தலில்  நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்றும் அவர் கூறினார். எங்களது மேற்கு வங்க அரசாங்கத்துடன்  காங்கிரஸ் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக டெல்லியில் கூட்டணியை  வைத்துக்கொள்வோம். ஆனால்  இங்கு பஞ்சாயத்து  தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர்  கூறினார். பஞ்சாயத்து தேர்தலில்  யாருடைய கருணையும் எங்களுக்கு தேவையில்லை.  இந்த பஞ்சாயத்து  தேர்தல் ஒரு பலப்பரீட்சை மைதானம் என்றும் அவர்  கூறினார். எங்களது கோரிக்கையை மத்திய  அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் எங்களது கட்சியின் 28 எம்.பி.க்களும் 188 எம்.எல்.ஏ.க்களும்  பிரதமர் அலுவலகத்திற்கு  போய் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் மம்தா  கூறினார். பஞ்சாயத்து  தேர்தலில் தனித்து போட்டி என்ற திரிணமுல்  காங்கிரஸ் கட்சியின் முடிவை  பாரதீய ஜனதா  கட்சி வரவேற்றுள்ளது. இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று பா.ஜ.க செய்தி தொடர்பாளர்  ஷா நவாஸ் உசேன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்