முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயிலில் இன்று ஆடிப்பூர தேரோட்ட திருவிழா

திங்கட்கிழமை, 23 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி, ஜூலை.- 23 - ஸ்ரீவில்லியில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 9மணிக்கு நடைபெறுகிறது.  விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லி நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஸ்ரீவில்லி. 108 வைணவத் தலங்களில் முதல் தலம் என்ற பெயர் பெற்றது.இங்கு அவதரித்த ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்க மன்னார் மீது தீராத காதல் கொண்டு மார்கழி நோன்பிருந்து அவரை கைத்தலம் பற்றினார். ஸ்ரீவில்லி ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாளன்று ஆண்டாளும், ரங்க மன்னாரும் பெரிய தேரில் அமர்ந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாகும். இந்த பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம்பிடித்து இழுத்து நிலையில் சேர்ப்பது பல்நெடுங்காலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் காலை மாலை வேளைகளில் ஆண்டாளும் ரங்கமன்னாரும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று (23.7.2012) காலை 9 மணிக்கு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக அரசு அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசுத்துறை உயர்அதிகாரிகளும் பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நிலையில் கொண்டு சேர்க்கின்றனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் திகழ்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு குடிநீர், அன்னதான, மருத்துவ, பஸ் வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மேலும் தினந்தோறும் கோயில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்டமான அலங்காரப்பந்தலில் ஆன்மீக, இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், சொற்பொழிவு ஆகியவை நடைபெற்று வருகின்றது. தேர் விரைவாக நிலை கொள்ளும் வகையில் சாலைகள் செப்பனிடப்பட்டு பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் மற்றஉம் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவில்லி. டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில் போலீசார் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்