முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்துக் கணிப்பால் கருணாநிதிக்கு தோல்வி பயம் - விஜயகாந்த்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

பழனி,ஏப்.3 - தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று வெளியான கருத்துக் கணிப்பால் கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று பழனியில் விஜயகாந்த் பேசினார். பழனியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.என்.வேணுகோபாலை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, 

பழனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேணுகோபாலு உங்களுக்கு நன்கு பழக்கப்பட்டவர். முன்னாள் எம்.பி. சேனாதிபதி கவுண்டரின் மகன். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். தமிழ்நாட்டில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறி வருகிறது. லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புகள் அ.தி.மு.க கூட்டணிக்கு 45 சதவீதமும், தி.மு.க. கூட்டணிக்கு 41 சதவீதமும் வெற்றி வாய்ப்புள்ளது என்றும் ஒரு ஆங்கில தொலைக்காட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கு 164 முதல் 180 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு 58 சதவீத ஆதரவு உள்ளது. இதனால் கருணாநிதிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. 

அமைச்சர் ஐ. பெரியசாமி ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் பழனி தொகுதியில் போட்டியிடுகிறார். ஏன்? பழனி தொகுதியில் போட்டியிட கட்சிக்கு உழைத்த தொண்டர்கள் யாரும் இல்லையா? இதுதான் தி.மு.க. நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நான் ஏதோ தப்பு செய்ததாக அவர்களது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள். அதே தொலைக்காட்சியில் ஏன் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பை வெளியிடவில்லை. 

கருணாநிதி தன் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அலிபாபா 40 திருடர்களை போல் கருணாநிதியின் குடும்பத்தில் 400 பேர்கள் உள்ளனர். கருணாநிதியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவது நமது கடமையாகும். எனவே நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபாலை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் தே.மு.தி.க. நகர செயலாளர் ஆர்.கே.டி. வெங்கடசுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் வி.ஏ. சின்னதுரை, பி.டி.சி. நாகராஜன், அ.தி.மு.க.நகர செயலாளர் கே. பரதன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஆயக்குடி பாரூக், சிவகுருநாதன், கொங்கு இளைஞர் பேரவை ஆறுமுகம், முன்னாள் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ பழனிவேலு, நகர் மன்ற தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றிய செயலாளர் அருள்செல்வன், நகர செயலாளர் குருசாமி, அ.தி.மு.க ரமேஷ், மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்